×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனாவால் 8 மணிக்கே நடந்த ஏகாந்த சேவை: 2.5 லட்சம் லட்டுகள் ஊழியர்களுக்கு இலவசம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோயிலில் வழக்கம்போல் ஆறு கால பூஜைகள் பக்தர்கள் இன்றி அர்ச்சகர்களால் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் நடக்க வேண்டிய ஏகாந்த சேவை, பக்தர்கள் இல்லாததால் 8 மணிக்கே தொடங்கி 8.30 மணியளவில் நிறைவுபெற்றது. இதனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏழுமலையானுக்கு இரவு 8 மணிக்கே ஏகாந்த சேவை முடிக்கப்பட்டு சுவாமிக்கு ஓய்வளிக்கப்பட்டதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.  இதற்கிடையே பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட லட்டு பிரசாதம் அப்படியே நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக 2.5 லட்சம் லட்டுகள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த லட்டுகளை என்ன செய்வது எனத்தெரியாமல் இருந்த நிலையில் தேவஸ்தான ஊழியர்களுக்கு இலவசமாக வழங்க கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி முடிவு செய்தார்.அதன்படி தேவஸ்தானத்தில் நிரந்தரமாக பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்டுகளும், ஒப்பந்த முறையில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு தலா 5 லட்டுகள் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

6 பேருடன் நடந்த திருமணம்
திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடி அருகே குண்டூர் மாவட்டம், தாடேபல்லியை சேர்ந்தவர்கள் வாகனங்களில் வந்து, திருமலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என தெரிவித்தனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், ‘நாங்கள் ஏற்கனவே ஏழுமலையான் கோயில் உள்ள கல்யாண மேடையில் மார்ச் 20ம் தேதி இரவு 9.30 மணி முகூர்த்தத்தில் திருமணம் செய்யப்போவதாக முன்பதிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தேவஸ்தான உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ‘மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர் உடன் மொத்தம் 6 பேரை மட்டும் திருமலைக்கு அனுமதிக்க முடியும்’ என தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை மட்டும் பாதுகாப்பு ஊழியர்கள் திருமலைக்கு செல்ல அனுமதித்தனர். இரவு 8 மணிக்கு திருமலைக்கு வந்த நிலையில், இரவு 9.30 மணியளவில் திருமலை பாபவிநாசம் சாலையில் உள்ள திருமண மேடையில் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.


Tags : Corona ,Tirupati Ezumalayan Temple , Tirupati Ezumalayan Temple, Corona, single service
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!