×

கொரோனா பீதியால் மதுரை சிறையில் 54 கைதிகள் விடுதலை

மதுரை:  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், மதுரை மத்திய சிறையில் உள்ள 54 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எங்கும் பொதுமக்கள் அதிகம் கூட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் நீதிபதி பி.எல்.பிரகாஷ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், எஸ்பி மணிவண்ணன், சிறைத்துறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா, முதன்மை நீதிபதி, குற்றவியல் நீதிபதி மற்றும் 58 இன்ஸ்பெக்டர்கள், 30 சப்-இன்ஸ்பெக்டர்கள் 50 நீதித்துறை ஊழியர்கள் 2 துணை கமிஷனர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மதுரை மத்திய சிறையில் சுமார் 1,500 கைதிகள் உள்ளனர். இதில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 50க்கும் அதிக கைதிகளை ஜாமீனில் விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக விடுவிக்கப்பட உள்ள கைதிகளின் பட்டியலை தயார் செய்த போலீசார், அரசுக்கு அனுப்பியதுடன், இதனை நீதிபதியிடமும் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 54 கைதிகள் சொந்த ஜாமீனில் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.

Tags : prisoners ,Corona ,jail ,Madurai ,panic , Corona, Madurai, Prison, Prisoners, Release
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ