×

தாய்லாந்து, நியூசிலாந்திலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா...எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது; சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் கடந்த 12ம் தேதி சென்னை வந்தார்.

அவர் அமைந்தகரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். அவர் காய்ச்சல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், கடந்த 17ம் தேதி  அயர்லாந்து டப்ளினில் இருந்து சென்னை வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதனால், தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக இருந்து வந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் 3 பேர்  பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 2 பயணிகள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவர் என தற்போது 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்  கொரோனா தொற்றிய 6 பேரும் வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள். சமூக தொற்றாக தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது எனஅமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.


Tags : Thailand ,New Zealand ,Tamil Nadu ,Corona ,Minister of Health Information , Return from Thailand, New Zealand Affects: 3 more people in Tamil Nadu ... Corona ... Minister of Health Information
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...