×

பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த பாடகி விமான பாத்ரூமில் பதுங்கி தப்பினாரா கனிகா கபூர்?

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லண்டனில் இருந்து சமீபத்தில் திரும்பிய அவர் லக்னோவில் பிரமாண்ட பார்ட்டி நடத்தியதாகவும் அதில் 100க்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்றதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பார்ட்டியில் பங்கேற்ற ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் பாஜ எம்பியுமான துஷ்யந்த் சிங்கும், உபி சுகாதார அமைச்சர் ஜெய்பிரதாப் சிங்கும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளதாக அறிவித்தனர். இதனால், கனிகா கபூர் மீது நோயை பரப்புதல், அரசு விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கனிகா கபூர், லண்டனில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த போது, கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பிக்க பாத்ரூமில் ஒளிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், ‘‘அதெல்லாம் புரளி. சர்வதேச விமான நிலையத்தில் அது போன்ற எந்த செயலையும் செய்ய முடியாது. எனக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை. லக்னோவில் நடந்த பார்ட்டி நான் ஏற்பாடு செய்ததில்லை. அது ஒரு பிறந்தநாள் பார்ட்டி. அதில் அரசியல் பிரமுகர் உட்பட சிலர் தான் பங்கேற்றனர். நானும் ஒரு அழைப்பாளராக பங்கேற்றேன். லண்டனில் இருந்து திரும்பிய 4 நாள் கழித்து தான் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகே பரிசோதனை செய்து கொண்டேன். வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென எந்த இடத்திலும் எனக்கு அறிவுறுத்தப்படவில்லை,’’ என்றார்.  உபி அமைச்சர் ஜெய்பிரதாப் சிங், வசுந்தரா ராஜே ஆகியோரின் ரத்த மாதிரிகள் நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.கையில் சீலுடன் ரயில் பயணம்: இறக்கப்பட்ட டெல்லி தம்பதி:
வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள், வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இடது கையில் அழியாத மை கொண்டு சீலிடப்படுகிறது. இந்த சீலுடன் யாரையும் பார்த்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பெங்களூர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதி பயணித்துள்ளனர். செகந்திராபாத்தில் இவர்கள் ஏறியுள்ளனர். ரயில் காலை 9.45 மணி அளவில் தெலங்கானாவின் காஜிபேட்ரயில் நிலையத்திற்கு வந்த போது, தம்பதியில் ஒருவரின் கையில் சீல் இருப்பதை பயணிகள் பார்த்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.

உடனடியாக ரயில்வே போலீசார் விரைந்து வந்து,  அந்த தம்பதியை ரயிலில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் இருந்த பெட்டி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. ரயிலில் ஏசியும் நிறுத்தப்பட்டது. 2 மணி நேர தாமதத்திற்குப் பின் அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது.Tags : Kannika Kapoor ,Birthday Party ,airport bathroom , Birthday Party, Singer, Kanika Kapoor, Corona
× RELATED ஸ்டாலின் பிறந்த நாள் விழா கிரிக்கெட்...