×

சில்லி பாயின்ட்...

* ஜோர்டானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று பாக்சிங்கில் பங்கேற்று மார்ச் 13ம் தேதி நாடு திரும்பிய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், 14 நாள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை மீறி மார்ச் 18ம் தேதி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்த விருந்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது பொறுப்பற்ற செயல் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
*  இந்திய கிரிக்கெட் வீரர்களில் விராத் கோஹ்லி தான் எனது அபிமான வீரர் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் கூறியுள்ளார்.
*  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகள் பெங்களூர் ‘சாய்’ மையத்தில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக ஆண்கள் அணி கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
* இலங்கையில் நடைபெற இருந்த அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மஜித் ஹக்குக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன கால்பந்து அணி நட்சத்திர வீரர் வூ லெய்க்கும் கோவிட்-19 பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
* அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள யூரோ 2020 கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் அதே பெயரிலேயே நடத்தப்படும். யூரோ 2020 என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என யுஇஎப்ஏ அறிவித்துள்ளது.
* பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் 2 ஊழல்தடுப்பு விதிமுறைகளை மீறியதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்படும் விசாரணையில் அவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 6 மாத தடையில் இருந்து அதிகபட்சமாக ஆயுள் தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
* மே 28ம் தேதிக்கு முன்பாக இங்கிலாந்தில் எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
*  ‘ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் டோனி இடம் பெற வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால், அதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. டோனி எப்போதுமே பரபரப்பான பெரிய அறிவிப்பு ஏதுமின்றி அமைதியாக தனது முடிவை அறிவிப்பார். அதனால் டி20 போட்டியில் இருந்தும் அவர் மிக அமைதியாக ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன்’ என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Tags : Virat Kohli Among Indian Cricketers , Indian cricketers, Virat Kohli
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...