×

தமிழக, ஆந்திர எல்லைகளுக்கு ‘சீல்’

ஊத்துக்கோட்டை: கொரோனா பரவுவதை தடுக்க தமிழக, ஆந்திர எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க தமிழக எல்லைகள் மூடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து தமிழக எல்லைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. இதன்படி இன்று காலை 6 மணிக்கு தமிழக, ஆந்திர எல்லைக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பதி, சித்தூர், கர்னூல்,  கடப்பா, பெங்களூரு,  ரேணிகுண்டா மற்றும் புத்தூர் பகுதிகளில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்து திருப்பி விடப்பட்டன.

இதனால் தமிழக, ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பகுதியில் கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. ஊத்துக்கோட்டையின் மற்றொரு  எல்லையான சத்தியவேடு சாலையில் காளஹஸ்தி, தடா, சூளுர்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கனரக  வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறாக, இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து பஸ், லாரி, கார்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் என 525 வாகனங்கள் வந்தது. இதில் லாரிகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட 110 வண்டிகள் ஆந்திராவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற வாகனங்கள் அனைத்தும் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாகலாபுரம், பிச்சாட்டூர் பகுதிகளில் இருந்து  தமிழக எல்லையான  பென்னலூர்பேட்டை வழியாக வரும் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழக எல்லைக்கு  வரும் வாகனங்களுக்கு  டாக்டர் பிரபாகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும் ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் உள்பட பல பகுதிகளுக்கு வரும் தனியார் கம்பெனி வாகனங்களில் வேலைக்கு சென்ற பணியாளர்களை மருத்துவ குழுவினர் சோதனை செய்து,  அவர்களின் முகவரிகளை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh Corona , Corona
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...