×

கொரோனா வைரஸ் எதிரொலி: அவசர தேவைக்கு மட்டுமே பாஸ்போர்ட் விண்ணப்பம்

சென்னை: கொரோனா வைரஸ் எதிரொலியாக அவசர தேவைக்கு மட்டுமே பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே பாஸ்போர்ட் சேவை மையம் அமைந்துள்ளது. இங்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தல், பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறுவது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண் பிரசாத் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் முயற்சியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் பாஸ்போர்ட் சேவை எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமாக வழங்கப்படும் பாஸ்போர்ட் எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை வருகிற மார்ச் 23ம் தேதி முதல் ஏப்.3ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே அவசர தேவை உள்ளவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல், தலைவலி, சளி போன்ற வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கோ, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கோ வருவதை தவிர்க்கவும். பெற்றோர் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு அழைத்து வருவதை தவிர்க்கவும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அவசியத் தேவையின்றி பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சம்பந்தமான விசாரணை நடைமுறை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அருண் பிரசாத் தெரிவித்துள்ளார். இதே நடைமுறை தமிழகத்தில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் அமல் படுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,emergencies , Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...