×

அமெரிக்காவில் இருந்து வந்தவர் பரிசோதனை முடிவு வரும் முன் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்

சென்னை: பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் மருத்துவமனையில் இருந்து தப்பியவரை போலீசார் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்குமாம்பலம், விஸ்வநாதன் தெரு, கல்யாண் குடியிருப்பில் வசித்து வருபவர் பகவதி(75). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு 10 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அப்போது அவரை விமானநிலையத்தில் சோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினர் தாம்பரம் சானிடேரியம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து அவரை மருத்துவமனையில் இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து ஆட்டோ பிடித்து மேற்கு மாம்பலத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அதே குடியிருப்பில் வசித்து வந்த சுதன் என்பவர் இவர் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார் என்பதையும், மருத்துவமனையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு வந்ததையறிந்த அவர். இது குறித்து அசோக்நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவருடைய வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மருத்துவமனையில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மறுபடியும் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு தான் வீட்டிற்கு அனுப்புகின்றனர். அவ்வாறு அனுப்பினாலும் அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இப்படி இருக்கையில் மருத்துவமனையில் இருந்து பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் யாருக்கும் தெரியாமல் வந்தது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : hospital ,examination ,United States ,Corona , Corona
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...