×

1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை : 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரானோவால் இதுவரை 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். தேர்வு எழுத வேண்டாம் , அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி தொடங்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதே போல் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பேசிய  சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு தேர்வு ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Sengottaiyan ,announcement ,Minister Sengottaiyan , Measures to be taken to conduct Grades 1 to 9: Minister Sengottaiyan
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து