×

கொரோனா பாதிப்பு எதிரொலி: சென்னை தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவைகள் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை தலைமை செயலகத்திற்கு வரக்கூடிய புகார்தாரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கடந்த 17ம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு அரசு துறைகளில் மனு அளிக்க வருவதுண்டு. அதுமட்டுமின்றி அமைச்சர்களை பார்ப்பதாகவும், முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் கொடுப்பதற்காகவும் பொதுமக்கள் வருவார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் மற்றும் புகார்தாரர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வருகின்ற பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. ஒருநாளைக்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் 200க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிப்பார்கள். தற்போது அவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்திற்கு மனு அளிக்க வருபவர்களை வெளியே தடுத்து நிறுத்தி, உள்ளிருக்கும் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மனுக்களை பெற்று செல்வதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை செயலகத்தில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதை காணமுடிகிறது.



Tags : headquarters ,Corona ,Chennai ,Public , Corona, echo, headquarters, petition, public, denial of permission
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...