×

பழநியில் கோவில் தரிசனத்திற்கு தடை: பக்தர்கள் வருகை இல்லாததால் வெறிச்சோடிய நகரம்

பழநி :  மலைக்கோயிலில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பழநி நகரம் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதனால்  வியாபாரமும் முடங்கி போனதால் கடைக்காரர்கள் கவலையடைந்து உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 1 வார காலமாகவே பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.

சாதாராண நாட்களில் வரும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பதிலாக நாளொன்றிற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்களே  வந்து சென்றனர். கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தின் காரணமாக கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று முதல் மலைக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 95 % நின்று போய் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. விவரம் அறியாமல் வரும் பக்தர்களையும் படிப்பாதையிலேயே போலீசார் திருப்பி அனுப்பி விடுகின்றனர். பழநி நகருக்கு வரும் பக்தர்களை நம்பி அடிவார பகுதியில் பஞ்சாமிர்த கடைகள், பிரசாத விற்பனை கடைகள், சிப்ஸ் தயாரிப்பு கடைகள், பொம்மை- பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் என 1000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பழநிக்கு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டதால் இக்கடைகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும் பக்தர்கள் வருகை இல்லாததால் வாடகை ஆட்டோ-கார் ஓட்டுனர்கள், உணவகங்கள், லாட்ஜ்கள் தொடர்பான தொழில்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. மொத்தத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. நாளொன்றிற்கு சுமார் ரூ.2 கோடி அளவிற்கு பணம்புழக்கம் முடங்கிப்போய் உள்ளது. பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக பங்குனி உத்திரம் வரும் மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்.9ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்திருவிழாவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தால் திருவிழா நடைபெறுவது சந்தேகம்தான். இதனால் அடிவார பகுதியில் தொழில் செய்யும் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். இந்த இழப்புகளில் இருந்து மீள்வதற்கு சுமார் 1 வருடத்திற்கு மேல் ஆகுமென வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

Tags : Temple ,Palani ,city ,darshan ,pilgrims , Palani, temple, ban, pilgrims, visit, city
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...