×

கும்பகோணத்தில் கிடங்குகளுக்கு எடுத்து செல்லாததால் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள்

கும்பகோணம் :  கிடங்குகளுக்கு எடுத்து செல்லாதால் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்  தேக்கமடைந்துள்ளது. இதனால் எடை குறைந்தால் அதற்கான இழப்பீட்டை நாம் தானே கட்ட வேண்டுமென என்று கொள்முதல் அலுவலர்கள்  வேதனையில் உள்ளனர். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக கடந்த ஜனவரி மாதம் விவசாயிகள் நாற்று நடவு செய்தனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. இதையொட்டி கும்பகோணம் கோட்டத்தில் 166 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. பின்னர் அறுவடை முடிந்து கிராமங்களில் கடந்த 15 நாட்களுக்கு முன் 35 கொள்முதல் நிலையங்கள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுத்து செல்லாததால், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தலா 20 ஆயிரம் நெல்  மூட்டைகளுக்கு மேல் தேங்கி இருக்கிறது. பகலில் வெயில், இரவில் குளிர்ந்த காற்றால் நெல் மூட்டைகளில் எடைய குறைய வாய்ப்புள்ளதால்  நிலைய அலுவலர்கள் கவலையுடன் உள்ளனர். எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனடியாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும். இல்லாவிட்டால் எடை குறையும் மூட்டைகளுக்கு கொள்முதல் அலுவலர்களே அபராதத்துடன் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கொள்முதல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொள்முதல் அலுவலர் கூறுகையில், இந்தாண்டு கும்பகோணம் கோட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ளனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நெல் சாகுபடி அதிகளவு நடந்துள்ளது.

இதனால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வெளிமாவட்டங்களுக்கு எடுத்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நெல் மூட்டைகளின் வரத்து அதிகரித்ததால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் மூட்டைகளை அவர்கள் கொள்முதல் செய்ய வில்லை. இதையறிந்த கொள்முதல் நிலைய அதிகாரிகள், கும்பகோணத்தில் உள்ள நீலத்தநல்லூர், கொத்தங்குடி, பாபநாசம், திருநாகேஸ்வரத்தில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கில் நெல் மூட்டைகளை அடுக்கினர். ஆனால் அங்கும் நெல் மூட்டைகள் நிரம்பியதால் நெல் மூட்டைகளை வைக்க இடமில்லாமல் கடந்த 15 நாட்களாக ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியிருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நெல் மூட்டையிலும் சுமார் 2 கிலோ வரை எடை குறைந்துள்ளது. இதை கொள்முதல் நிலைய அலுவலர்கள் அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து கொள்முதல் அலுவலர்களும் மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோது திருவிடைமருதூரில் ஆதினத்திற்கு சொந்தமான  இடத்தில் நெல் மூட்டைகளை அடுக்க முடிவு செய்துள்ளோம். மேலிடத்திலிருந்து ஒப்புதல் வந்த பிறகு அனைத்து நெல் மூட்டைகளும் அங்கு  வைக்கப்படும் என்கின்றனர். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து 24 மணி நேரத்துக்குள் கிடங்குக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் அதிகாரிகள், தஞ்சை மாவட்டத்தில் அதிகளவில் விளைச்சலாகி உள்ளது என கணக்கிட்டு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்கில் காலம்தாழ்த்தி முடிவு எடுப்பதால் எங்களுக்கு தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில் சாகுபடி செய்துள்ள ஏக்கரை கணக்கிட்டு அதற்கு தேவையான வகையில் நெல் மூட்டைகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொள்முதல் அலுவலர்களுக்கும், தமிழக அரசுக்கும் தான் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றார்.

Tags : warehouses ,Kumbakonam ,procurement centers ,Stacked Paddy Bags , Purchase, paddy bundles
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...