×

திருவாரூரில் இருந்து காரைக்கால் வரை 41 கி.மீ. தூரத்திற்கு ரயில்பாதை மின்மயமாக்கும் பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாகை:  திருவாரூரில் இருந்து நாகை வழியாக காரைக்கால் வரை 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின் மயமாக்கும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது. திருச்சியில் இருந்து காரைக்கால் வரை சுமார் 145 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே பாதையை மின் மயமாக்குவதற்காக கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருச்சியில் இருந்து தஞ்சை வரையிலும், தஞ்சையில் இருந்து திருவாரூர்  வரையிலும், திருவாரூரில் இருந்து காரைக்கால் வரையிலும் என்று 3 கட்டங்களாக பிரித்து பணிகளை செய்ய திட்டமிடப்பட்டது. இதன்படி  திருச்சியில் இருந்து தஞ்சை வரை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றது. இந்த பாதை இரட்டை பாதையாகவும் மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து  தஞ்சையில் இருந்து திருவாரூர் வரை முடிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வுகளை மேற்கொண்டு  சென்றார்.

இதற்கு அடுத்தபடியாக திருவாரூரில் இருந்து காரைக்கால் வரை 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் மயமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  முதலில் மின் கம்பங்கள் நடப்பட்டது. இதை தொடர்ந்து மின் கம்பிகள் இழுக்கப்பட்டு வருகிறது. தீவிரமாக மின் மயமாக்கும் பணி நடந்து வருவதால்  இன்னும் சில தினங்களில் பணி முழுமைபெற வாய்ப்புள்ளது. பணிகள் முழுமையாக நிறைவுபெற்ற பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு  செய்வார். ஆய்வுக்கு பின்னர் இந்த பாதையில் மின்சார ரயில்கள் இயக்க பரிந்துரை செய்வார். இது குறித்து நாகூர், நாகப்பட்டினம் ரயில் பயணிகள்  உபயோகிப்பாளர் சங்க தலைவர் மோகன் மற்றும் செயலாளர் சித்திக் ஆகியோர் கூறியதாவது:

தென் மாவட்டங்களுடன் நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரயில்கள் இதுவரை இல்லை. வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், திருநாள்ளாறு  போன்ற சிறந்த வழிபாட்டு தலங்கள் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில்  இருந்து இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் ரயில் போக்குவரத்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் திருச்சியில் இருந்து  காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டு திருவாரூர் வரை நிறைவு பெற்றுள்ளது. விரைவாக சென்னை செல்ல இயலும்.  காரைக்காலில் இருந்து திருவாரூர் செல்ல 40 நிமிடம் ஆகிறது. மின்மயமாக்கும் பணி நிறைவுபெற்று ரயில்கள் இயக்கப்பட்டால் சுமார் 15 நிமிடம்  குறையும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. காரைக்காலில் இருந்து அதிக அளவிலான ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது என்றனர்.


Tags : Thiruvarur ,Karaikal Railway , Karaikal, railway, electrification, work intensity
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...