×

திருமங்கலத்தில் கொரோனா பீதியால் வாரச்சந்தை மூடல்: வழக்கம்போல ஆடுகளுடன் வந்த வியாபாரிகள் ஆவேசம்!!!

திருமங்கலம் :  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையால் வாரச்சந்தை மூடப்பட்டது தெரியாமல், ஆடுகளுடன் வியாபாரிகள்  திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் நேற்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்குடன் தமிழகம் முழுவதும்  வாரச்சந்தைகள் மூடப்படும் என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  தென்மாவட்ட அளவிலான ஆட்டுச்சந்தை நடைபெறும். 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனை நடைபெறும். கொரோனா பாதிப்பு  எதிரொலியால் கோழிக்கறி விற்பனை கடும் சரிவை சந்தித்து வருவதால், ஆடுகளின் விற்பனை கடந்த வாரம் முதல் அதிகரித்துள்ளது.

இதனால் நேற்று நடைபெறும் ஆட்டுச்சந்தையில் அதிக ஆடுகளை விற்பனை செய்வது என்ற நோக்கில் அதிகாலை 3 மணி முதலே ஆடுகளுடன்  தென்மாவட்ட வியாபாரிகள் வாகனங்களில் வரத்துவங்கினர். ஆனால் அரசின் திடீர் உத்தரவை தொடர்ந்து, அதிகாலை 2 மணியளவில் நகராட்சி  ஊழியர்கள் திருமங்கலம் ஆட்டுச்சந்தையை பூட்டி சென்றனர். மேலும் அரசு உத்தரவுப்படி, ‘இன்று ஆட்டுச்சந்தை நடைபெறாது’ என போர்டு  வைத்தனர். இதனால் வியாபாரிகள், நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் டவுன் போலீசார், நகராட்சி ஊழியர்களுடன்  இணைந்து வியாபாரிகளை அப்புறப்படுத்தினர். இதில் பெரும்பாலான வியாபாரிகள், உசிலம்பட்டி ரோட்டிலுள்ள அரசு போக்குவரத்து டிப்போ அருகே  தங்களது ஆடுகளை கொண்டு சென்று விற்பனை செய்ய முயன்றனர்.

போலீசார் அங்கு சென்று, கொரோனா பிரச்னையால் அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் நோக்கில்தான், வாரச்சந்தையை மூட அரசு  உத்தரவிட்டுள்ளது. அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக்கூறினர். இதையடுத்து சுமார் 2 மணிநேரம் கழித்து வியாபாரிகள்  அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் ரஞ்சித், பாண்டி கூறுகையில், ‘‘ஒவ்வொரு வாரமும் திருமங்கலம் சந்தையில் ஆடுகளை  விற்பனை செய்வது வழக்கம். கொரோனா பாதிப்பால் திடீரென இந்த வாரம் ஆட்டுச்சந்தையை மூடியது எங்களுக்கு தெரியாது. நேற்று முன்தினம்  இரவு அரசு அறிவித்ததை கிராமங்களில் இருந்த எங்களால் அறிய முடியவில்லை. காலையிலே தெரிவித்து இருந்தால் கூட வாகனங்களில்  ஆடுகளை ஏற்றிக் கொண்டு வெளியூரிலிருந்து வந்திருக்க மாட்டோம். இதனால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஒவ்வொரு வியாபாரிக்கும்  இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : corona panic ,closure ,Thirumangalam Weekend ,Thirumangalam , Thirumangala, corona, panic, weekend market, goat, merchants, agitation
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...