×

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை முன்கூட்டியே நிறைவு; சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை மார்ச் 31-ம் தேதியே முடிவடைதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மேலும் காலை, மாலை என்று சட்டப்பேரவை இயங்கும் என்றும் அறிவித்துள்ளார். ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்டோர், “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். இப்படி கூறிக் கொண்டு சட்டப்பேரவை கூட்டம் மட்டும் நடத்துவது சரியாக இருக்காது. பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் சென்று, கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட இது வசதியாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர், “சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க அவசியம் இல்லை. பேரவை கூட்டம் நடத்தினால்தான் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு தலைமை செயலகத்தில் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாலை 3.40 மணிக்கு கூட்டம் முடியும் வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவை நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.. ஏப்ரல் 9-ம் தேதி வரை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 31-ம் தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : session ,Tamil Nadu ,Tanapal ,Speaker ,Tamil Nadu Assembly ,Thanapal Assembly , Corona Precautions, Tamil Nadu Assembly, Speaker Thanapal Assembly,
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...