×

கேரள வியாபாரிகள் வருகை குறைந்ததால் களையிழந்த பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்

பாவூர்சத்திரம் : கொரோனா வைரஸ் பீதியால் கேரள வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்ததால் பாவூர்சத்திரம் மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் காய்கறிக்கு மிகவும் பிரசித்திப் பெற்றது பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட். இந்த மார்க்கெட் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, சென்னை மற்றும் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கும் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கீழப்பாவூர் வட்டாரம் மட்டுமின்றி சங்கரன்கோவில், கடையநல்லூர், புளியங்குடி, இடைகால், சுரண்டை, சாம்பவர்வடகரை, சேர்ந்தமரம், பொய்கை, வீரசிகாமணி, ஆய்க்குடி, ஆனைகுளம், இரட்டைகுளம் மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளில் இருந்தும் கத்திரி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், சேனைக்கிழங்கு, கடையம், ஆம்பூர், மந்தியூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர்  உட்பட அம்பை வட்டார பகுதியில் இருந்து சிறுகிழங்கு சேனைகிழங்கு, சேம்பு கிழங்கு வகைகள் உட்பட அனைத்து காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.

கேரளாவில் இருந்து காய்கறி மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து தங்களது தேவைக்கேற்ப காய்கறிகளை வாங்கி கேரளாவிற்கு கொண்டு செல்வர். இதனால் உள்ளூர் மொத்தம், சில்லரை வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகள் வரவாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் தினமும் களைகட்டும். இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக கடந்த சில நாட்களாக கேரள வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வரவில்லை.  உள்ளூர் வியாபாரிகள் மட்டும்தான் காய்கறிகளை தங்கள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்கின்றனர். இதனால் மார்க்கெட்டில் விற்பனையில் மந்தம் ஏற்பட்டு விலையும் வீழ்ச்சி அடைந்து காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் காரணமாக மார்க்கெட் களையிழந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அனைத்து கடைகளும்  நாளை அடைப்பு

கொரோனாவை முறியடிக்கும் வகையில் நாளை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு அமலாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை (22ம் தேதி) பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என மார்க்கெட் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் அறிவித்துள்ளார்.

Tags : Kerala ,merchants ,influx ,Kerala Merchants Visit Pavoorchatram , kerala ,Pavoorchatram, market, vegetables
× RELATED கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி...