×

ஆட்டோ, பேருந்துகள்,ரயில்கள் ஓடாது.. முழு கடையடைப்பு.. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நாளை அமலாகிறது முழு மக்கள் ஊரடங்கு

சென்னை: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில் நாளை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

*நாட்டில் கொரோனாவின் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ள நிலையில், 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

*இந்தியாவில் இனிதான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

*தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், நகைக்கடைகள், சுற்றுலா தலங்கள், மதுபான பார் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

*அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

*இந்த நிலையில் கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் மட்டும் பொதுமக்கள் ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

*நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாலை 5 மணிக்கு அனைவரும் இந்த இக்கட்டான தருணத்தில் பணியாற்றுவோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கைகளை தட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

*இதனை ஏற்று நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், இதர ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

*தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனியார் பால் விநியோகம் செய்யப்படாது என்று பால்முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று மோடி கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, காலை 7 மணிக்கு முன்பாக அனைத்து பகுதிகளுக்கும் பால் விநியோகம் செய்ய இயலாது என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது

*தமிழகத்திலும் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளும் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

*இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த நிலையில்,பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  

*இதை போல் தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மெளனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் நாளை ஓடாது, அவை அனைத்தும் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

* மேலும் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க ஆம்னி பேருந்துகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக வைத்துள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

*சுய ஊரடங்கு கடைப் பிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் நாளை ஆட்டோக்கள் இயங்காது என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


Tags : shutdown , Auto, buses, trains will not run. Full shutdown.
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில்...