×

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 2 பெண்கள் அனுமதி

மதுரை:  மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து மதுரை வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை வழங்குவதற்காக அவனியாபுரம் சின்ன உடைப்பு மற்றும் ஆஸ்டின்பட்டி ஆகிய 2 இடங்களில் தலா 180 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு முகாம்களை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அமைத்துள்ளனர். இங்கு 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை வழங்க தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையே துபாயில் இருந்து தனியார் விமானம் ஒன்று மதுரை வந்தது. அதில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 143 பேர் பயணித்திருந்தனர். அவர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர் குழுவினர் ‘தெர்மல் ஸ்கேனர்’ உள்ளிட்ட நவீன கருவிகளுடன் பரிசோதனை செய்யப்பட்டனர். அப்போது 143 பேரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் அவர்களை கொரோனா முகாம்களுக்கு அனுப்ப சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளின் சமரசத்துக்கு பின்னர் அவர்கள் முகாம்களுக்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 143 பேரில் 2 பெண்களைத் தவிர 141 பேர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 119 பேர் சின்ன உடைப்பு முகாமிலும், 22 பேர் ஆஸ்டின்பட்டி தனியார் கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியா ராஜூவிடம் கேட்டபோது, துபாயில் இருந்து வந்த எவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு இல்லாத பயணிகளை ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த டி.புளியங்குடியைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை உறவினர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல மதுரை பேரையூரைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. அவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரித்தபோது, அந்த பெண் மும்பையில் இட்லி கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. எனவே அவரை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக முடிவு செய்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். பின்னர், திடீரென்று அவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். அவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் தேடிப்பிடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Tags : Madurai Government Hospital 2 ,Madurai Government Hospital , Madurai, Government Hospital, Corona, Sign, Women, Permission
× RELATED பெண்களை தாக்கும் கேன்சர் வைரஸ்!