×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும்; ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் மற்றும் மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் எல்லைகளை மூடும் முதல்வரின் முடிவுக்கு ப,.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கூட இந்த வைரசின் பாதிப்பையும், உயிர் பலியையும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூ றி வரும் அமெரிக்காவும், ஜெர்மனியும் இன்னும் அதை வெளியே விடவில்லை. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் ஒன்று, இரண்டு என்று தொடங்கிய இதன் பாதிப்பு, வேகமாக பரவி வருகிறது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 249 ஆக உள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்நோய் மேலும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்நோயின் தாக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் உரையாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை வரவேற்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழகம் மற்றும் மராட்டியத்திலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Tags : Tamil Nadu ,P. Chidambaram ,Corona , Corona virus, Corona preventive measure, P. Chidambaram,
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி