×

வங்கிக்கடன், வரி வசூலிக்க கூடாது என்ற கேரள ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி வரை புதிய வரிகள் விதிக்கக் கூடாது, வங்கி கடன்களை வசூலிக்க  கூடாது’ என கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு  மக்களுக்கு அரசு அதிகாரிகள் வரி விதிப்பது, வங்கி கடன் வசூலிப்பது ஆகியவற்றை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 6ம் தேதி வரை வரி, வங்கி கடன் வசூலிப்பு கூடாது என உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கன்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘ கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். மக்கள் பிரச்னைகளை சந்திக்காத வகையில் நாங்கள் முறையான வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம். ஜிஎஸ்டி உட்பட பலவித வரிகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இதனால், உயர்நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க கூடாது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’’ என்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது.


Tags : Supreme Court of India ,Kerala Court ,Kerala High Court , Banking, Tax Collection, Kerala Icord, Supreme Court
× RELATED 7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு