×

கடும் குற்றங்களை தடுப்பதற்கான சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர அரசு ஏன் முயற்சிக்கவில்லை? திமுக எம்எல்ஏ எழிலரசன் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கடும் குற்றங்களை தடுக்கும் வகையிலான ஒரு குற்றச்சாட்டை கொண்டு வர அரசு ஏன் முயற்சிக்கவில்லை என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கேள்வி எழுப்பினார்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு காஞ்சிபுரம் எழிலரசன்(திமுக)  பேசியதாவது:   காஞ்சிபுரம் மாவட்டம் 3 சட்டமன்ற தொகுதி கொண்ட ஒரு சிறிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கூட மாறுபட்ட கருத்துகள் இருக்கிறது. மக்கள் ஏக்கத்தோடு பார்ப்பது காஞ்சிபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இப்போது மறுக்கப்பட்டுள்ளது. அத்தனை அரசு அலுவலகங்களும் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. காஞ்சிபுரத்தில் செயல்படும் இரண்டு மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகிறது. அதை முழுமையான அதிகாரம் கொண்ட நிர்வாக அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை நீதிமன்றமாக தரம் உயர்த்த வேண்டும்.

காஞ்சிபுரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அரசு உறுதி அளித்திருந்தது. தற்போது இந்த தொகுதியில் ஒதுக்குப்புறமாக இருக்கக் கூடிய பகுதியில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அந்த பேரூந்து நிலையத்தை அமைக்க வேண்டும். காவல் துறையினருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை சுமுகமாக தீர்க்க உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் அடிப்படையில் மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் பீஸ் கமிட்டி என்ற ஒரு குழுவை அமைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த கமிட்டி ஏற்படுத்தப்படவில்லை. நாட்டில் லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கம் இருப்பதை போக்க வேண்டும் என்றால் நீதிபதிகள் அதிகமாக நியமிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்.  

  இந்த நாட்டில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும். மாநில உரிமையை பறிக்கக்கூடிய சட்டத்தை நாம் வேடிக்கை பார்த்து விட்டுவிட்டோம். கூலிப்படைகளை கொண்டு செய்யக்கூடிய கடும் குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களை இந்த அரசு எப்போது கொண்டு வரும் என்று ஒரு வழக்கில் நீதிபதி கேட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதுபோன்ற ஒரு சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர ஏன் முயற்சிக்கவில்லை? அமைச்சர் சி.வி.சண்முகம்: நீதிமன்றத்தில் தினந்தோறும் நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை சொல்லிக் கொண்டிருப்பதாக சொல்கிறார். அதைப்பற்றி இப்போது பேசினால் நீதிமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் பல சங்கடங்கள் ஏற்படும். நமது மாநிலத்திலும் கடுமையான குற்றங்களை செய்பவர்களுக்கு சட்டங்கள் இருக்கிறது. நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கிற்கு ஏற்றவாறு அந்தந்த கால கட்டங்களுக்கு தகுந்தவாறு சில கருத்துகளை சொல்லும்.

அதற்காக ஒவ்வொரு வழக்கிற்கும் நாம் சட்டங்களை போட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆராய்ந்து அந்த வழக்குகளில் இறுதியாக தீர்ப்பு வழங்குகிற போது அதன் அடிப்படையில் சட்டங்கள் தேவையா என்பதை ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். அதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சட்டத்தை அப்படியே இங்கே அமல்படுத்தினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?. அதிகாரத்தை பயன்டுத்துகிறீர்கள். ஒடுக்க நினைக்கிறீர்கள் என்றெல்லாம் குற்றம்சாட்டுவீர்கள். அங்கு அந்த சட்டம் வந்தபோது என்னவெல்லாம் விமர்சனம் வந்தது. எனவே தமிழகத்தில் கடும் குற்றம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க ேவண்டும் என்பதுதான் அரசின் முடிவு. எனவே அந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பின் முடிவை பார்த்து அரசு நல்ல முடிவை எடுக்கும்.  எழிலரசன்: வேண்டிய சட்டங்களை நியாயமான சட்டங்களை நிறைவேற்றிட வேண்டும். பல்வேறு தலைவர்களை சிறைச்சாலைகள்தான் அடையாளம் காட்டியுள்ளது. மிசா காலத்தில் கைது செயயப்பட்ட சிறை கொடுமை மிகவும் வேதனையானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அப்போது மிசா கைதிகள் மனித உரிமைகளை மீறி, சட்ட விரோத முறையில் கையாளப்பட்டார்கள் என்ற சான்றுகள் உள்ளன.

  அத்துமீறல்கள் நடைபெற்றது என்றெல்லாம் சிறைச்சாலைகளில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் இப்போதுள்ள சீர்திருத்தங்கள் போதுமானதல்ல. சிறைச்சாலைகளில் கைதிகளை கையாளக்கூடிய சிறந்த இடம் லண்டன். அமைச்சர் அங்கு சென்று வர வேண்டும். சிறைக் கைதிகள் சரியான முறையில் கையாளப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை மனரீதியான இடத்தை தரக்கூடிய வகையில் நாம் தர வேண்டும்.   சிறைத்துறையில் இருக்கக்கூடியவர்களுக்கு அவர்கள் குடும்பத்தாருக்கும் தர வேண்டும். நன்னடத்தை பிரிவை சார்ந்த அலுவலர்கள் சிறைவாசிகளை நேர்காணல் செய்து அவர்கள் குழந்தைகள் படிப்பு, விடுதலைக்கு பின்பு வேலைவாய்ப்பு செய்து தர பணியாற்றுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். 64 நன்னடத்தை அலுவலர்கள்தான் உள்ளனர். இவர்கள் 25 ஆயிரம் கைதிகளை எப்படி கையாளளுவார்கள்.

சிறைவாசிகள் மனைவி பிள்ளைகள் படிப்புகளுக்கு எடுத்த முயற்சி என்ன, அதற்கான புள்ளி விவரங்களை தர முடியுமா, சிறையில் அத்துமீறல்களே இல்லை என்ற நிலை இருப்பதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. உணவு வழங்குவதில் இருந்து சந்திப்பதற்கு கூட வேற்றுமை இல்லாத தன்மை பார்க்க வேண்டும். அதை உறுதி செய்ய சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு ஆங்காங்கே ஒரு குழு அமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. 


Tags : government ,crimes ,Tamil Nadu ,Elections ,MLA ,DMK , Tamil Nadu, Tamil Nadu Government, DMK MLA Elelarasan
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...