×

கொள்கை விளக்க புத்தகத்தில் ஒரே செய்தி திரும்ப திரும்ப சொல்லப்பட்டுள்ளது: திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

சென்னை: சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் திரு.வி.க. நகர் தாயகம் கவி (திமுக) பேசியதாவது:  2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் பக்கம் எண் 7ல் திருச்சியில் இருக்கிற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2017, 2018, 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் இதே செய்திதான் சொல்லப்பட்டிருக்கிறது;  இப்போது மீண்டும் 2020ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிற கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தின் பக்கம் எண் 12லும் இதே செய்திதான் சொல்லப்பட்டிருக்கிறது.   சாதாரணமாக, சட்டக்கல்லூரிக்கு விடுதி கட்டுவது தொடர்பாக, 5 ஆண்டு காலம் வெளியிடப்பட்ட அந்த கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்திலே ஒரே செய்தி, ஒரே பல்லவியாக தொடர்ச்சியாக பாடப்பட்டு கொண்டிருக்கிறதே இது ஏன்?.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை 11-10-2012 அன்று நடந்த உச்ச நீதிமன்ற முழு நீதிமன்ற கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை முதல்வர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மன்றத்தில் அமைச்சர் தன்னுடைய பதிலுரையில், எதற்காக இந்த கோரிக்கை நிச்சயமாக நிறைவேறும் என்று சொன்னார். அமைச்சர் சி.வி.சண்முகம்: உச்ச நீதிமன்றம் 2 முறை நிராகரித்துள்ளது. மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். கடந்த 3ம் தேதி கூட முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தாயகம் கவி: தமிழகத்திலே ஒட்டுமொத்தமாக இருக்கிற நீதிமன்றங்களில், இன்றையதினம் வரை நிலுவையில் இருக்கிற மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 14,10,406 ஆகும். இதனால் மக்கள் பலபேர் வெறுத்தே போய்விடுகிறார்கள்.

இதையும் தாண்டி நீதிமன்றத்திற்கு வெளியே ஆட்களை பிடித்து பஞ்சாயத்து செய்து அவர்களுடைய வழக்கில் ஒரு சமரசம் காண்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி சமரசம் செய்கிற சூழ்நிலை ஏற்படுகிறபோது சட்டம் ஒழுங்கு பிரச்னையும் அங்கே தலைதூக்குகிறது. எனவே, இந்த நிலையெல்லாம் இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொன்னால் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை பெருக்கிட வேண்டும்.  காலியாக இருக்கிற நீதிபதிகளின் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.  நீதிமன்ற பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK , DMK Membership Charge, Law, Courts
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி