×

கொரோனா பீதியில் டிரம்ப்: வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜி7 மாநாட்டை நடத்த முடிவு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஜி-7 மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற ஜூன் 10 முதல் 12 வரை அமெரிக்காவில் நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாகவும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநாடு நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.  இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கேம்ப் டேவிட்டில் நடைபெற இருந்த ஜி-7 மாநாடு ரத்து செய்யப்படுகிறது.

 இதன் மூலம், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தங்களின் நேரம் மற்றும் ஆற்றலை பொதுமக்களின் சுகாதார சவாலை எதிர்கொள்வதற்காக பயன்படுத்த முடியும். இந்த மாநாடு வீடியோ காரன்பரன்ஸ் மூலமாக நடத்தப்படும்.  இந்த வாரம் நடத்தப்பட்டதை போல வரும் ஏப்ரல், மே மாதங்களில் அதிபர் டிரம்ப் ஜி7 உறுப்பு நாடுகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உரையாடுவார். தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,”என்று கூறப்பட்டுள்ளது.


Tags : conference ,Trump ,video conferencing ,G7 , Corona, Trump, Video Conferencing, G7 Conference
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை