×

சிறைத்துறையில் முதன்மை இடத்திற்கு வர முடியாதது ஏன்?: அமைச்சர் விளக்கம்

சென்னை: சிறைத்துறையில் முதன்மை இடத்திற்கு வர முடியாதது ஏன் என்பது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம், சிறைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்து பேசியதாவது:தமிழகத்தில் உள்ள மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை 1,233. அதிலே, 480 நீதிமன்றங்களை இந்த ஒன்பது ஆண்டுக்காலத்தில் இந்த அரசு திறந்திருக்கிறது. இன்னும் 99 நீதிமன்றங்கள் திறப்பதில் பல்வேறு நிலைகளிலே நிலுவையில் இருக்கின்றன. கண்டிப்பாக, அந்த 99 நீதிமன்றங்களும், குறிப்பாக, அதிலும் 56 தாலுகாக்களில், நீதிமன்றங்கள் இல்லாத தாலுகாவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அது முக்கியமானது. புதிய நீதிமன்றங்களை திறப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான நீதிபதிகளையும் இந்த அரசு நியமனம் செய்திருக்கிறது.

இந்த ஒன்பது ஆண்டுகாலத்தில் மட்டும் கிட்டத்தட்ட, 224 நீதிபதிகளை அரசு நியமித்திருக்கிறது. 176 நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அதிலே, சில பிரச்னைகள் இருக்கின்றன. எனவே, அதை களைவதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். 46 அரசு வழக்கறிஞர்கள் விரைவிலே நியமனம் செய்யப்பட்டு, பணிகள் எல்லாம் ஒதுக்கப்படும்.சிறைத் துறையில் நாம் முதன்மை மாநிலமாக வந்திருக்கலாம்.  இரண்டு காரணங்களுக்காக நாம் அதில் முதன்மை இடத்திற்கு வர முடியவில்லை.  காரணம், இடப்பற்றாக்குறை, இரண்டாவது உணவு. அந்த சிறைவாசிகளுக்கு கொடுக்கப்படுகிற பணம், ஒதுக்கப்படுகிற நிதி. இந்த இரண்டு காரணங்களுக்காக நாம் பின்னோக்கிச் செல்கின்றோம். அனைத்து சிறைகளிலும் இருக்கிற அந்த சிறைவாசிகளினுடைய வசதிகளை ஆராய்ந்து குறிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்படுகிற அந்த உணவை ஆராய வேண்டும் என்பதற்காக ஒரு குழுவினை நியமனம் செய்து இன்றைக்கு உத்தரவினை பிறப்பித்திருக்கிறார்கள்.  அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் சிறைவாசிகளுக்கு தேவையான வசதிகளும் குறிப்பாக உணவுகளை உயர்த்தி தருவதற்கு முதல்வர் எடப்பாடி நடவடிக்கை எடுப்பார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.   

எந்தெந்த மாவட்டத்திற்கு எந்தெந்த இடத்திற்கு நாங்கள் நீதிமன்றங்கள் அறிவித்தோமோ, நாங்கள் அறிவித்து விட்டோம். நிதியும் ஒதுக்கியிருக்கிறோம். ஏஎஸ்எம் கொடுத்து இருக்கிறோம். ஆனால், உயர் நீதிமன்றத்தில் இருந்து ஒரு அறிக்கை வர வேண்டும். அந்த அறிக்கை வந்தால் தான் நாம் இங்கிருந்து அரசாணை போட முடியும். ஆகவே, அந்த மாவட்டத்தில் இருக்கிற உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதிகளிடம்  உங்களுடைய மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூலமாக சொல்லி அதனை விரைவுப்படுத்தி அரசுக்கு வரும் பட்சத்தில் உடனடியாக நிதி ஒதுக்கி தருவதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார்.Tags : prison , possible, primary, place ,Minister, explanation
× RELATED தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்