×

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்: முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை

சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. ஆனால் அதில் எடுத்த முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்டோர், “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். இப்படி கூறிக் கொண்டு சட்டப்பேரவை கூட்டம் மட்டும் நடத்துவது சரியாக இருக்காது. பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் சென்று, கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட இது வசதியாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த முதல்வர், “சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க அவசியம் இல்லை. பேரவை கூட்டம் நடத்தினால்தான் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, திமுக கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாலை 3.40 மணிக்கு கூட்டம் முடியும் வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இன்று அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக எம்எல்ஏக்கள் சிலர் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், கூட்டத்தை காலை, மாலை நடத்தி குறைந்த நாட்களில் முடிக்கலாம் என்று ஆளுங்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது” என்றனர்.

Tags : meeting ,Business Review Committee , Speaker, Official , committee, No results ,announced
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...