×

தனி விமானத்தை அனுப்பி எங்களை காப்பாத்துங்க...: பிலிப்பைன்சில் தவிக்கும் புதுகை மாணவர் கண்ணீர்

பொன்னமராவதி: தனி விமானம் அனுப்பி எங்களை காப்பத்துங்க என்று பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவர், செல்போனில் கூறி கதறினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் ஆசிரியர் வெங்கட்ராமன். இவரது மகன் மோனிஷ்கரன் (21), பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவரையும், இவருடன் படிக்கும் 400 இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது பெற்றோரிடம் போனில் பேசிய மோனிஷ்கரன் கண்ணீருடன் கூறி உள்ளார்.பெற்றோரிடம் மாணவர் மோனிஷ்கரன், செல்போனில் பேசியதாவது: கொரோனோ பரவிவருவதால் இங்கு சூழ்நிலை சரியில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்க், சானிடைசர் போதிய அளவு கிடைக்கவில்லை. எனவே இங்கு படிக்கும் சுமார் 400 இந்திய மாணவர்கள் 14ம் தேதி இந்தியா புறப்பட தயாராக இருந்தோம். ஆனால், விமான நிலையத்தில் எங்களை அனுமதிக்கவில்லை. தினமும் விமான நிலையம் செல்கிறோம்.

இந்தியா செல்ல இந்திய அரசு உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என கூறி மறுத்து வருகிறார்கள்.  எங்களை இந்தியா அழைத்து வந்தால் தேவையான மருத்துவ பரிசோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எனவே, தனி விமானம் ஒன்றை பிலிப்பைன்சுக்கு மத்திய, மாநில அரசு அனுப்பி எங்களை காப்பாற்றி இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கண்ணீருடன் பேசினார். அவரது கண்ணீர் பேச்சை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், தனது மகன் மற்றும் அவருடன் தவிக்கும் மற்ற மாணவர்களையும் மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

செங்கை கலெக்டரிடம் மனு: மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பேரறிவாளன் என்பவர் செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில்’’  பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலாமாண்டு மருத்துவம் படிக்கும் என் மகள் மெர்லின், தாயகம் திரும்ப கடந்த 7 நாட்களாக மணிலா விமான நிலையத்தில் காத்திருக்கிறாள். இந்திய தூதரகம் மூலம் மத்திய,  மாநில அரசுகள் இணைந்து எனது மகள் உள்ளிட்ட பிற மாணவர்களை தனிவிமானத்தில் இந்தியா  அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

Tags : Philippines , Tropical, student, Philippines
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!