×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 6 பெண்கள் உள்பட 9 பேர் கருகி பலி: 4 பேர் சீரியஸ்

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 8 பேர்,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிப்பாறை கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 5 பட்டாசு தயாரிக்கும் தனி அறைகள் உள்ளன. நேற்று இங்கு 30 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் அறைக்கு வெளியே தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடைசியாக இருந்த ஒரு அறையில் மருந்துகளில் ஏற்பட்ட உராய்வைத் தொடர்ந்து, பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், ஆலையின் அடுத்தடுத்த அனைத்து அறைகளும் முற்றிலும் இடிந்து நொறுங்கின. பயங்கர சத்தத்தைக் கேட்டு சிலர் அங்கிருந்து தப்பியோடி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஆனால், அறைகளுக்குள் பட்டாசு தயாரிப்பில் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டனர். எங்கும் ஒரே புகை மூட்டமும், காயமடைந்த தொழிலாளர்களின் கதறல் சத்தமுமாக இருந்தது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. வீரர்கள் தீயை அணைத்தபடி வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், ஏழாயிரம்பண்ணை போலீசார் சென்று இறந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த சம்பவத்தில் தென்காசி அருகே மைப்பாறையைச் சேர்ந்த ராணி (42), ஜெயபாரதி (45), சிப்பிப்பாறை அருகே முக்குட்டுமலையைச் சேர்ந்த பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32), தங்கம்மாள் (39), கருப்பையா (36), பரமசிவம் (33) ஆகிய 8 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சுப்பிரமணியன், பொன்னுத்தாய், சுப்பம்மாள், அய்யம்மாள், மாடசாமி, பேச்சியம்மாள், முருகலட்சுமி, ஜெயராம், முருகையா ஆகிய 9 பேரை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே முக்குட்டுமலையைச் சேர்ந்த முருகையா (55) உயிரிழந்தார். இதுதவிர, 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெடிவிபத்து நடந்த இடத்தை தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், மாவட்ட எஸ்பி பெருமாள் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விதிமீறி பட்டாசு தயாரித்ததால் விபரீதம்
டிஆர்ஓ லைசென்ஸ் வாங்கி செயல்பட்டு  வரும் இந்த ஆலையில், சிறிய ரக பட்டாசு ரகங்களை  தயாரிக்க மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல மாதங்களாக, அனுமதியின்றி இங்கு பேன்சி ரக மற்றும் பெரிய அளவிலான பட்டாசுகளும் தயாரித்து  வந்துள்ளனர். இதனால்தான், மிகப்பெரிய  வெடிவிபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

Tags : fireworks explosion ,fireworks factory ,Chatur ,Explosion 9 , Explosion ,fireworks factory ,Chatur,seriously
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...