×

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்: டெல்லி திகார் சிறையில் ஒரே நேரத்தில் தண்டனை நிறைவேற்றம்

புதுடெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார மற்றும் கொடூர சித்ரவதை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 8 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின் இறுதியில் நீதி வென்றதாக நிர்பயாவின் தாயார் கூறினார்.டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா தனது ஆண் நண்பருடன் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு வீட்டுக்கு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது வந்த கல்லூரி பேருந்து அவர்களை விரும்பும் இறக்கி விடுவதாக கூறி ஏற்றி கொண்டது. இதுதான் தனது வாழ்வின் இறுதி பயணத்துக்கு அச்சாரமிடும் என்பது நிர்பயாவுக்கு அப்போது தெரியாது.ஓடும் பேருந்திலேயே அதில் இருந்த சிறார் உள்பட 6 பேர் நிர்பயாவை கூட்டு பலாத்காரம் செய்தனர். எதிர்த்து போராடிய அவரையும் ஆண் நண்பரையும் தாக்கினர். நிர்பயாவின் பிறப்புறுப்பில் கூர்மயான இரும்பு கம்பியால் கொடூரமாக குத்தி பலத்த காயத்தை ஏற்படுத்தினர். உள்ளுறுப்புகள் வெளியே வந்தன. பின்னர் இருவரையும் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விட்டனர். 13 நாள் சிகிச்சைக்கு பிறகு நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறார் என்பதால் 3 ஆண்டு கூர்நோக்கு பள்ளி வாசத்துக்கு பிறகு விடுதலையானர். ராம்சிங் என்பவர் சிறையிலேயே கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். முகேஷ் குமார் சிங் (32), பவன்குப்தா (25), வினய்குமார் சர்மா (26), அக்‌ஷய்குமார் சிங் ( 31) ஆகிய நால்வருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன. ஆனால் நால்வர் தரப்பிலும் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போனது.  இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து, டெல்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேந்தர் ராணா கடந்த 5-ந் தேதியன்று, குற்றவாளிகள் 4 பேரையும் 20-ந் தேதிஅதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு புதிய மரண வாரண்டை பிறப்பித்தார்.இந்த மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிறகும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, 4 பேர் தரப்பிலும் வக்கீல் ஏ.பி.சிங் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தர்மேந்தர் ராணா நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்தார். அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா தேவி நேற்று முன்தினம் கோர்ட்டுக்குவந்திருந்தார். அவர், தனது கணவர் அப்பாவி என்றும், தனக்கு நீதி வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், கணவருடன் தன்னையும், தனது மகனையும் சேர்த்து தூக்கில் போட வேண்டும் என்று கோரி கதறி அழுதபடி மயங்கி விழுந்தார். இந்த பரபரப்புகளுக்கு இடையே குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகிய 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதேபோல் இந்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் வரவழைத்து மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கோரி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவையும், தன்னுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. பலாத்கார சம்பவம் நடந்த நாளில் தான் டெல்லியில் இல்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை எதிர்த்து முகேஷ் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆனது. குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.இந்நிலையில் கடைசி முயற்சியாக நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தங்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர்.
நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தார்கள். இந்த மனு இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகினார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங் “ இந்த மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி பெற்றீர்களா” எனக் கேட்டார்.

அதற்கு வழக்கறிஞர் ஏ.பி.சிங், “ கொரோனா வைரஸ் காரணமாக என்னால் நகல்ஏதும் எடுக்கமுடியவில்லை” எனத் தெரிவித்தார்அதற்கு நீதிபதி மன்மோகன்சிங் “ ஒரேநாளில் 3 நீதிமன்றங்களில் வாதாடிவிட்டீர்கள். தண்டனையை நிறுத்துவது சாத்தியமா, உங்களால் வாதிட முடியாது. நீங்கள் முறையிட்டதால் இரவு 10 மணிக்கு விசாரிக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்இதற்கிடையே நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் தெரிவித்துச் சென்றார்.

இதனிடையே பவன் குப்தா நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும்  தாக்கல் செய்தார்.  மேற்படி மனு மீதான விசாரணை நேற்று அதிகாலை 3.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. சுமார் 20 நிமிடங்கள் இந்த விசாரணை நடந்தது.  விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதற்கிடையே திகார் சிறையில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணிகள் தொடங்கின. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த ஹேங்மேன் பவன் ஜலாட் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில்ஒரே நேரத்தில் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. இதை திகார் சிறை நிர்வாகம் உறுதி செய்தது. 4 பேரின் உடல்களும் அரைமணிநேரம் தூக்கில் தொங்கவிடப்பட்டன. அதன்பின் டாக்டர் அவர்கள் உடலை பரிசோதனை செய்து இறந்ததை உறுதிப்படுத்தினார். அதன்பின்னர் குற்றவாளிகள் 4 பேரின் உடல்களும் தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் பிரேதபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேதபரிசோதனையை முன்னிட்டு  மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  மருத்துவ ஊழியர்கள், 4 பேரின் உறவினர்கள் தவிர யாரையும் பிரேதபரிசோதனை அறை  அருகே செல்ல அனுமதிக்கவில்லை. உறவினர்களிடம் தேவையான கையெழுத்து பெற்ற  பிறகு உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக திகார் சிறைத்துறை இயக்குனர் சந்தீப்கோயல் உறுதி செய்தார்.

அக்‌ஷய் உடல் அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் அவுரங்காபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முகேஷ் உடல் ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்டது. வினய் மற்றும் பவன் உடல் தெற்கு டெல்லியில் உள்ள ரவிதாஸ் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றிய போது சிறைக்கு  வெளியே நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதையடுத்து சிறைவளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.தூக்கிலிடப்பட்டதை கேட்டதும் தேசிய கொடியை அசைத்து, நிர்பயா வாழ்க, பாரத்  மாதா கீ ஜே போன்ற கோஷங்களை எழுப்பினர். இனிப்புகளை வினியோகித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
எப்போதும்  முன்பு இல்லாத வகையில் உச்ச நீதிமன்ற அமர்வு நள்ளிரவில் கூடி நிர்பயா  குற்றவாளிகளின் மனுவை விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்கியது. இரண்டாவது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீடு மனுக்களை  நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூஷன், ஏ எஸ்  போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நள்ளிரவு 2.30  மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘ கருணை மனுவை நிராகரித்தது  தொடர்பாக நீதிமன்றம் மீளாய்வு செய்ய போதிய முகாந்திரம் இல்லை. கருணை மனு  குறித்து ஜனாதிபதி முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. அதில் தலையிட முடியாது.  அவர் எடுக்கும் முடிவு நன்கு பரிசீலிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.    தூக்கிலிடும் முன்பாக குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற  குப்தா,  மற்றும் அக்‌ஷய் சிங் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றனர்.

 அப்போது பவன்  குப்தாவின் வழக்கறிஞர், ‘‘பள்ளி இறுதிசான்றிதழ்படி குற்றம் நடக்கும் போது பவன் வயது 16தான். இதை விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச  நீதிமன்றம் கவனத்தில் ெகாள்ளவில்லை. ஆவணங்களையும் பரிசீலிக்கவில்லை. மார்ச்  18ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது கருணை மனு 19ம் தேதி  நிராகரிக்கப்பட்டது. டெல்லி ஆளுநர் மற்றும் முதல்வரிடம் பவனின் தண்டனையை  குறைக்கும் மனு நிலுவையில் உள்ளது. இதில் முடிவெடுக்கும் வரை இரண்டு மூன்று  நாட்களுக்கு தண்டனையை தள்ளி வைக்க வேண்டும். தூக்கு தண்டனை ஆயுள்  தண்டனையாக குறைக்கப்பட்டால், தூக்கு தண்டனை நிறைவேற்றியது தவறான முடிவாகி  விடும் ’’ என்றார்.இதற்கு மத்திய அரசு  சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், பவன்  சிறார்  கோரிக்கை மூலம் தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய  கோரிக்கை விடுக்கிறார். இதை கருணை  மனு நிராகரிப்பை எதிர்க்கும் காரணமாக  எடுத்து கொள்ள கூடாது. சீராய்வு, மேல் முறையீடுகள் ஏற்கெனவே  நிராகரிக்கப்பட்டு விட்டது. கருணை மனு நிராகரிப்பை மீளாய்வு செய்வதற்கு  வாய்ப்பு இல்லை’’ என்றார்.

  இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள்,  அனைத்து வாதங்களும் ஏற்கெனவே முன் வைக்கப்பட்டவைதான். புது புது விதிகளை  காட்டி மனு செய்து வருகிறீர்கள் என்றனர்.
பவன்  வழக்கறிஞர் கவாஜா கூறுகையில், ‘‘முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் சுட்டு ெகால்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டதை  சுட்டி காட்டினார். பவன் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் இது முன்பு திட்டமிட்ட ஒன்றில்லை. அவரை உசுப்பேற்றி மற்றவர்கள் ஈடுபட வைத்திருக்கலாம். எனவே மரண தண்டனை அவசியமற்றது. அனைத்தையும் ஒரே  கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது’’ என்றார்.  இதை  நீதிபதிகள் ஏற்க  மறுத்து விட்டனர். தண்டனை நிறுத்த உத்தரவிட முடியாது என கூறி மேல்  முறையீடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை  நால்வருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

போராட்டத்தை தொடர்வோம்: நிர்பயாவின் பெற்றோர் ஆவேசம்
நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அளித்த பேட்டியில், ‘‘ பெண்கள் இனி பாதுகாப்பாக இருக்கலாம்.  இறுதியில் நீதி கிடைத்துள்ளது.  பாலியல் பலாத்கார வழக்குகளில் மரண தண்டனையை  தாமதப்படுத்தும் சட்டத்திலுள்ள இடுக்குகளை அடைப்பதற்கான போராட்டத்தை  தொடர்வோம். எனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டது.  உச்ச நீதிமன்ற விசாரணைக்கு  பிறகு நள்ளிரவு வீடு திரும்பி எனது மகளின் புகைப்படத்தை கட்டிப்பிடித்து  ,‘‘ உனது வலிக்கு நியாயம் கிடைத்து விட்டது’’ என கூறினேன். மார்ச் 20 ம்  தேதி நிர்பயா நியாய நாளாக கொண்டாடப்படும். இந்த வரலாற்றில் முக்கிய  நாளாகும்.   எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்’’ என்றார்.

 நிர்பயா குற்றவாளிகளின் கடைசி நிமிடங்கள் கலங்காத குற்றவாளிகள் கடைசியில் கதறிய வினய்
தூக்கு தண்டனை நிறைவேற்றுவது பற்றி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. பதற்றமோ, பயமோ அவர்களிடம் இல்லை. அவர்கள் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருந்தனர். தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு வினய் சர்மா, முகேஷ் ஆகியோர் மட்டும் இரவு உணவாக ரொட்டி, பருப்பு,  சாதம், குழம்பு ஆகிவற்றை சாப்பிட்டனர். ஆனால் காலை உணவை  நால்வரும் தொடக்கூட இல்லை. அக்‌ஷய் மாலை தேனீர் அருந்தினார். நேற்று காலை  குளிக்கவும், ஆடைகளை மாற்றவும் மறுத்து விட்டு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்கு வந்தனர். அப்போது வினய் மட்டும் கதறி அழுதார்.

உடல் தானத்திற்கு முன்வந்த முகேஷ் வினய்சர்மாவின் கடைசி விருப்பம்
தூக்கிலிடுவதற்கு  சில நிமிடங்களுக்கு  முன்பாக முகேஷ் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய  விரும்புவதாக விருப்பம்  தெரிவித்தார். சிறை வாசத்தின் போது வரைந்த  ஓவியங்களை சிறை  கண்காணிப்பாளரிடம் கொடுக்க வினய் சர்மா கோரினார். மேலும் தான் வைத்திருந்த அனுமன் சாலீசா  புத்தகத்தை  குடும்பத்தினரிடம் தர விருப்பம் தெரிவித்தார். அரை மணி நேரம்  அவர்கள்  தூக்கில் தொங்கினர் .சிறை விதிகளின்படி இது வழக்கமானது. பின்னர்  அவர்களது  உடல் டிடியு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு  செல்லப்பட்டது.  நான்கு பேர் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டது இதுவே முதல்  முறையாகும்.

எனக்கு மகிழ்ச்சி தான்
நிர்பயா குற்றவாளிகளை தூக்கில்  போட்டவர் பவன் ஜலாட் (57), உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர். 4 பேரின் தூக்கை நிறைவேற்ற இவருக்கு தலா ரூ.20,000 என மொத்தம் ரூ.80,000 ஊதிய வழங்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறகு பவன் ஜலாட் கூறுகையி்ல், ‘‘என் வாழ்க்கையில் முதல்முறையாக, நான்கு குற்றவாளிகளை மரணதண்டனையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாளுக்காக நான் நீண்ட காலமாக காத்திருந்தேன். எனது தாத்தா லக்ஷ்மன் மற்றும் தந்தை கல்லு ஆகியோருக்கு 1989ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை செய்யப்பட்டவர்களை தூக்கிலிடும் பணி வழங்கப்பட்டது. எனது தந்தை கல்லு, பயங்கரமான குற்றவாளிகளான ரங்கா மற்றும் பில்லாவையும் தூக்கிலிட்டார்,’’ ஏன்றார்.

நியாயம் வென்றது: பிரதமர் மோடி
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், “நியாயம் வென்றது. பெண்களின் பாதுகாப்பு, மாண்பை காப்பது மிக  முக்கியம். பெண்கள் அனைத்து துறைகளிலும் பரிமளித்து வருகிறார்கள். பெண்கள்  முன்னேற்றம், அதிகாரமளித்தல், சமத்துவம், சம வாயப்புக்கு முக்கியத்துவம்  கொடுக்கும் வகையிலான தேசத்தை உருவாக்குவோம் ’’ என நிர்பயா பெயரை  குறிப்பிடாமல் பிரதமர் மோடி பதிந்துள்ளார்.

Tags : convicts ,death ,country , Nirbhaya ,rape case ,Simultaneous ,Delhi ,Dikar jail
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...