×

100 பந்து கிரிக்கெட் விலகினார் வார்னர்

சிட்னி: இங்கிலாந்தில் புதிதாக அறிமுகமாகும் ‘தி ஹண்ட்ரட்’ 100 பந்து கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விலகியுள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20, டி10 என பல்வேறு பரிணாம மாற்றங்களை சந்தித்து வரும் கிரிக்கெட் விளையாட்டில் புது வரவாக ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடர் இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் அக்டோபருக்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 100 பந்துகள் என்ற அடிப்படையில் நடைபெற உள்ள புதுமையான இந்த தொடரில், சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாட வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், குடும்ப மற்றும் சொந்த காரணங்களுக்காக ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரில் இருந்து விலகுவதாக வார்னர் அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரும் ஒரே சமயத்தில் நடப்பதும் வார்னரின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள். ஆரோன் பிஞ்ச், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் உட்பட பல ஆஸ்திரேலிய வீரர்கள் 100 பந்து கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வார்னரைத் தொடர்ந்து மேலும் பலர் விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   அதே சமயம், ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் டி20 தொடர், அதன் பிறகு நடைபெற்றால் அதில் வார்னர் நிச்சயம் பங்கேற்பார் என அவரது மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Warner , Warner ,quits 100-ball cricket
× RELATED அக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு