×

இந்திய கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி மரணம்

கொல்கத்தா: இந்திய கால்பந்து அணி முன்னாள் நட்சத்திர வீரர் பி.கே.பானர்ஜி (83 வயது) கொல்கத்தாவில் காலமானார். மேற்கு வங்க மாநிலம் மோயாங்குரியில் பிறந்த பானர்ஜி (1936, ஜூன் 23), இந்திய அணிக்காக 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி 65 கோல் அடித்துள்ளார். 1962ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பானர்ஜி, 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த இந்திய கால்பந்து வீரராக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 1952, சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில் பீகார் அணிக்காக தனது 16வது வயதில் அறிமுகமான பானர்ஜி, அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு முகமதன் ஸ்போர்ட்டிங் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டது கால்பந்து விளையாட்டின் மீதான அவரது ஈடுபாட்டுக்கு சான்றாகும்.

1956ல் நடந்த மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி 4வது இடம் பிடித்ததுடன், அந்த தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என வீழ்த்தியதில் பானர்ஜியின் பங்களிப்பு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது என்றால் மிகையல்ல.
இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி பாங்காக் ஆசிய போட்டியில் (1970) வெண்கலம், சிங்கப்பூர் பெஸ்டா சுகான் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. கிழக்கு பெங்கால் அணி தொடர்ச்சியாக 5 முறை சிஎப்எல் கோப்பையை வெல்வதற்கும் காரணமாக இருந்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2ம் தேதி கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பானர்ஜி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



Tags : PK Banerjee ,Death ,Indian , Indian football star, Death,PK Banerjee
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்