×

100 பிரபலங்களுக்கு பார்ட்டி தந்த பாலிவுட் பாடகிக்கு கொரோனா

பிரபல பாலிவுட் திரைப்பட பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவருடன் பார்ட்டியில் பங்கேற்ற 100 பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளனர்.
பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டன் சென்று விட்டு மும்பை திரும்பினார். மும்பை வந்த பிறகு அவர் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு உபி மாநிலம் லக்னோவில் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில், எம்பிக்கள், பாலிவுட் பிரபலங்கள் உட்பட 100 பேர் வரை கலந்து கொண்டனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கனிகா கபூருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தன. அவரது தொண்டைச் சளி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த பரிசோதனையில் கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை கனிகாவே நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் தனி வார்டில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கனிகா கபூர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் பற்றிய விவரங்களை மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.  முன்னெச்சரிக்கையாக இந்த பார்ட்டியில் பங்கேற்ற உபி சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அவரது மகனும் பாஜ எம்பியுமான துஷ்யந்த் சிங், வசுந்தராவின் மருமகன் உள்ளிட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். பார்ட்டியில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கொரோனா பீதியில் உள்ளனர்.

இப்படி பண்ணீட்டிங்களே... திரிணாமுல் எம்பி புலம்பல்:
பார்ட்டியில் பங்கேற்ற பிறகு துஷ்யந்த் சிங் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கும் வந்துள்ளார். இதனால், எம்பிக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘துஷ்யந்துக்கு பக்கத்து சீட்டில் 2.5 மணி நேரம் அமர்ந்திருந்தேன். இந்த அரசு எல்ேலாரையும் சிக்கலில் மாட்ட  வைக்கிறது. உடனடியாக நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

பிரார்த்தனை கூட்டம் நடத்திய 2 பாதிரியார்கள் மீது வழக்கு:
கேரளாவில் கொரோனா  வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கோயில்கள், சர்ச்சுகள்,  பள்ளி வாசல்களில் பிரார்த்தனை  உட்பட எந்த நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம்  என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், காசர்கோடு  மாவட்டம், ராஜபுரம் அருகே உள்ள கோளிச்சால் பனத்தடியில்  உள்ள செயின்ட் ஜோசப்  ஆலயத்தில் இந்த தடையை மீறி நேற்று முன்தினம் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் நடத்திய பாதிரியார்கள்  தாமஸ், ஜோசப் ஆகியோர் மீது கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைப்படி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு:
ஆந்திர மாநில சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நெல்லூர் மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனில் இருந்து வந்த பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவருக்கும்  கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெக்காவில் இருந்து வந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்தவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று தெரியவந்தது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு, விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கைகுலுக்கிய 2 எம்எல்ஏ.க்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்:
கேரள  மாநிலம், காசர்கோடு மாவட்டத்தை ேசர்ந்த 47 வயதான ஒருவர் கடந்த 11ம் தேதி  துபாயில் இருந்து விமானம் மூலம் கோழிக்கோடு வந்தார். இவர்  12ம் தேதி முதல் 17ம் தேதி வரை காசர்கோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்டார். அங்கு நடந்த கால்பந்து போட்டியிலும் கலந்து கொண்டார்.  பின்னர். நெருங்கிய உறவினர் திருமண நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். அதில், காசர்கோடு தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் நெல்லிக்குன்னு, மஞ்சேஸ்வரம் எம்எல்ஏ கமருதீன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவர்கள் 2 பேரும், கொரோனா பாதித்தவருடன் கை குலுக்கினர். இந்நிலையில், உடல்நிலை பாதித்த அந்த நபருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் மாலைதான் கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால், அவருடன் கை குலுக்கிய 2 எம்எல்ஏ.க்களும்  தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களும், பழகியவர்களும் பீதி அடைந்துள்ளனர்.

Tags : singer ,celebrities ,Corona , 100 Celebrities, Bollywood Singer, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...