×

வெளிமாநில வாகனங்கள் இன்று முதல் நுழைய தடை தமிழக எல்லைகளுக்கு சீல் வைப்பு

* கொரோனா பரவுவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை
* பஸ், ரயில்கள் நாளை ஓடாது

சென்னை: அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேச மாநில எல்லைகள் இன்று முதல் 31ம் தேதி வரை மூடப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதனால், அனைத்து போக்குவரத்தும் முழுமையாக முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், நகைக்கடைகள், சுற்றுலா தலங்கள், மதுபான பார் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியும் நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு அறிவித்துள்ளார். அதன்படி பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள், அலுவலகங்கள், பஸ், ரயில்கள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும் பிரதமர் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

அப்போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் விளக்கினார். இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் கீழ் குறிப்பிட்டுள்ள வாகன போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக இன்று (21ம் தேதி) முதல் 31.3.2020 வரை மூடப்படுகிறது. இந்த சாலைகளில், கீழ்க்கண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
* அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், காஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள்.
* இதர சரக்கு வாகனங்கள்.
* தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்.
* பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள். எனினும், இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். மேலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 9 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி,
* மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
* 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
* 22.3.2020 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.
* கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம் மற்றும் பிற துறைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 22ம் தேதி மாலை 5 மணிக்கு மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
* சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்க்கவும், அறுவை சிகிச்சை செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அதை முடிந்த வரை தள்ளி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
* மத்திய நிதி அமைச்சர் தலைமையில் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க பொருளாதார மீட்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தோட்டப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தக் கூடாது.
* பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
* வதந்திகளை நம்ப வேண்டாம்.

அதன்படி, 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் எதுவும் இயங்காது. மெட்ரோ ரயில்களும் அன்றைய தினம் இயங்காது. தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளின் (மினி பஸ்) உரிமையாளர்கள் அரசின் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அன்று மாலை 5 மணிக்கு பிரதமர் தெரிவித்துள்ளபடி, தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அனைவருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் நாளை (இன்று) முதல் 31.3.2020 வரை மூடப்படும். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொதுமக்கள் அரசு எடுத்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து, கொரோனா வைரஸ் நோயை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
* 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
* சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்க்கவும்.
* பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

Tags : territories ,Tamil Nadu , Out-of-state ,vehicles banned , boundaries ,Tamil Nadu
× RELATED ஒரு விரல் புரட்சியே… மக்களவைத்...