×

கொரோனா பற்றி வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை ஏப்ரல் 3 வரை சிறையில் அடைக்க உத்தரவு!


சென்னை: கொரோனா பற்றி வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை ஏப்ரல் 3 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதாக கூறிவந்த ஹீலர் பாஸ்கர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா வைரஸுக்கு இல்லுமினாட்டி சதி தான் காரணம் என ஹீலர் பாஸ்கர் வீடியோ வெளியிட்டார். மேலும், கொரோனா மூலம் மக்கள் தொகையை குறைக்க சதித்திட்டம் நடப்பதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, சோதனைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை ஊசி போட்டு கொலை செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தவறான மருத்துவ முறைகளை கூறி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியதாக ஹீலர் பாஸ்கர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆங்கில மருத்துவ முறைகள் பற்றி தொடர்ந்து ஹீலர் பாஸ்கர் அவதூறாக பேசி வருகிறார். ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது குறித்த கேள்வி கேட்கப்பட்ட போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதன் அடிப்படையில் அவர் பதிலளித்திருந்தார். தற்போது ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 18ம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் என்பவர், கோவை மாநகர துணை ஆளுநரிடம் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

அதில், தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதனை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருவதாக நிஸ்டி அமைப்பை நடத்திவரும் ஹீலர் பாஸ்கர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார். தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவின் 54கீழும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார். அதன்படி கோவை மாநகர காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் குனியமுத்தூர் காவல்துறையினர் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். தற்போது ஏப்ரல் 3 வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவ பார்க்கலாம் என வீடியோ வெளியிட்டு ஏற்கனவே ஹீலர் பாஸ்கர் கைதானவர். ஹீலர் பாஸ்கர் பேச்சை கேட்டு சில ஆண்டுகளுக்கு முன் வீட்டில் பிரசவம் பார்த்து கர்ப்பிணி  பெண் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : jail ,Healer Bhaskar , Corona, gossip, Healer Bhaskar, April 3, jail
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!