×

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் பதிலளித்துள்ளார்..: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்!

சென்னை: 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் பதிலளித்துள்ளார், என்று சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்களித்துள்ளார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்குமாறு, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது, 7 பேர் விடுதலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ தாயகம் கவி கேள்வி எழுப்பினார்.

இதற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதிலளிக்கையில், 7 பேர் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும், இறுதி முடிவும் ஆளுநர் எடுக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு தீர்மானம் குறித்து ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் செயலகத்திலிருந்து கிடைத்துள்ள பதிலில், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகளை உள்ளடக்கிய MDMA(மல்டி டிசிப்ளினரி மானிடரிங் ஏஜென்சி) என்ற அமைப்பு தற்போதும் ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்து வருகிறது. அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் இடைக்கால அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பொருத்தே ஆளுநர் தனது இறுதி முடிவை தெரிவிப்பார், என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : release ,Governor ,persons ,Shanmugham , Release of 7, Governor Panwarlal, Minister of Law and Order,CV Shanmugam
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...