×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் திமுகவினர் மாநகராட்சி வாகனத்தை நேற்று சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 427 கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிக்கடை, உணவகம், மளிகை கடை, இலை கடைகள், பூக்கடைகள், கறிக்கடைகள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை எளிதில் வாங்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டை இடித்து புதிய கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று திருப்பூர் மாநகராட்சி சார்பில் கடைகளை இடிப்பதற்கு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்படிருந்தது. இதை பார்த்து மார்க்கெட் பகுதியில் ஒன்று திரண்ட வியாபாரிகள் மற்றும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், டிகேடி நாகராஜ், ராஜ்மோகன் ஆகியோர் ஒன்றிணைந்து மாநகராட்சி வாகனங்களை சிறைபிடித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தெற்கு போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தற்காலிகமாக இடிக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது: தினசரி மார்க்கெட்டை இடித்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் கட்ட மத்திய அரசிடமிருந்து அனுமதி வந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் நாங்கள் பணியை துவங்கினோம். இந்த வியாபாரிகளிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கடைகள் கட்ட வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : In the Smart City Project Resistance to demolish daily market
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...