×

கிருமிநாசினி அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிருமிநாசினி அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவற்றை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்தவித நவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது 7 ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் சென்னையில், முகக்கவசம், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலையில் உள்ளதால் மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பயனளிக்காமல் உள்ளது.

எனவே, மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்படடிருந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உலகம் முழுவதும் கிருமிநாசினிக்கு பற்றாக்குறை உள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து வந்த 2 லட்சம் பேரில் 2,984 பயணிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எனவும் உயர்நீதிமன்றதில் அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, கிருமிநாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : state government ,High Court , Coronavirus, Disinfectant, High Court, Tamil Nadu Govt
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...