×

தனித்தீவானது கொடைக்கானல்: வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் இருந்து வெளியேற முடியாமல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பரிதவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் முகாமிட்டுள்ள 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த இவர்கள் வட்டக்கானல் பகுதியில் தங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கொடைக்கானலில் தங்கி உள்ள அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து அங்கு தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட இஸ்ரேல் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வெளியேறி விட்டனர். ஆனால் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு டிக்கெட், விசா, உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களையும் அரசு அலுவலர்கள் வெளியேற உத்தரவிட்டனர். அவர்கள் தங்களது நிலையை விளக்கி தற்போதைய நிலையில், சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதை கூறியதையடுத்து வரும் 31ம் தேதி வரை அவர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொடைக்கானலுக்கு நேற்று காலை சுற்றுலா வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள், கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல கார்களில் வருபவர்களையும் திருப்பி அனுப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பழநி சாலை வழியாக கொடைக்கானலுக்கு வாகனங்களில் வந்த சுற்றுலாப்பயணிகள், அடிவாரத்திலேயே சோதனை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எனவே வரும் 31ம் தேதி வரை கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Kodaikanal ,foreigners , Kodaikanal: The foreigners are unable to leave
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்