×

முதல்வரின் உத்தரவை மீறி கடலூரில் நடத்தப்பட்ட ஆட்டுச்சந்தை: ஒரே நாளில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கடலூர்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வாரச்சந்தைகளை நடத்தக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் அதையும் மீறி கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி கடலூர் மாவட்டம் வேப்பூரில் வார ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேப்பூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இப்பகுதிக்கு கடலூர் மாவட்டம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். சாதாரண வாரச்சந்தையில் 50 லட்சம் வரை கால்நடைகள் விற்பனை செய்யப்படும். தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் 1 கோடிக்கும் அதிகமாக கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வாரச்சந்தைகள்  நடத்தக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது உத்தரவையும் மீறி வேப்பூரில் வாரச்சந்தை நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக கோழிக்கறி விற்பனை கடுமையாக சரிந்துள்ள நிலையில், சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தம்கரையில் வாரச்சந்தை நடைபெறாது என அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை திரும்ப கொண்டு சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதோடு வாரச்சந்தைகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு வழக்கம் போல் ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்பனைக்காக எடுத்து வந்தனர். ஊத்தங்கரை காவல்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இன்று சந்தை நடைபெறாது என்று கூறியதன் அடிப்படையில், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை திரும்ப கொண்டு சென்றனர். தண்டோரா மூலம் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Tags : Cuddalore ,CM , Cuddalore, attuccantai, Rs .2.50 crore, of sheep
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!