×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடல்

நாகை:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டுள்ளது. மேலும், திருப்பலிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. மேலும், இந்நோய் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பள்ளி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு, மக்கள் அதிகளவில், ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க கேளிக்கை நிகழ்ச்சிகள், மாநாடு, கருத்தரங்கம், சுற்றுலா தளங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மூடப்படுவதாக பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு, தினமும் 6 வேளை சிறப்புத் திருப்பலி நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாள்களாக 3 வேளை மட்டுமே திருப்பலி நடத்தப்பட்டது. தற்போது, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் பேராலயம் சார்ந்த அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால், வழிபாட்டுக்குப் பேராலயம் மூடப்படுவதாக நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கிறிஸ்துவர்களின் தவக்காலம் நடைபெற்று வரும் நிலையில் பேராலயம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

Tags : Closure ,Velankanni Mata Panchayat ,Corona , Corona, intimidation, eulogy, monthly rally, closure
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...