×

ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளர் அதிரடி: சுயநல சமூகத்திடம் இருந்து பூமியை காக்கும் கொரோனா

ஃபிராங்க்பர்ட்: ‘சுயநல சமூகத்திடம் இருந்து பூமி  தன்னை கொஞ்சம் பாதுகாத்துக் கொள்வதின் அறிகுறியாக  கொரோனா தொற்றுநோய் இருக்கிறது’ என்று ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோ தெரிவித்துள்ளார். கொரொனா பீதி காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இல்லாமல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்  மக்கள் நல அரசுகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டன.

போட்டிகள் இல்லாமல் விளையாட்டு உலகமே வெறிச்சோடி போய்விட்டது. அடுத்த கட்டமாக ஆட்கள் இல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்புகள் நடக்கத் தொடங்கியுள்ளன. ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் நேற்று ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு(டிஃஎப்பி) நிர்வாகிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
ஆன்லைனில் செய்தியாளர்களுடன் நடந்த இந்த சந்திப்பின் போது, டிஃஎப்பி தலைவர் ஃபிரிட்ஸ் கெல்லர்,  செய்தி தொடர்பாளர் ஜென்ஸ் கிரிட்டர், அணி மேலாளர் ஆலிவர் பியர்ஹோஃப் கேமரா முன்பு பேசினர்.

நிகழ்ச்சியில் வீடியோவில் தோன்றி பேசிய  ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்சியாளர்  ஜோச்சிம் லோ, ‘நாகரீக, சுயநல சமூகத்திடம் இருந்து இந்த பூமி தன்னை சிறிதளவு பாதுகாத்துக் கொள்ளும் அறிகுறிகள் தான் கொரோனா வைரஸ் தொற்று நோய். அதிகாரம், பேராசை, லாப நோக்கு என்றிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் சூழல் வந்துள்ளது’ என்று அதிரடியாக தெரிவித்தார். எல்லோரும் கொரோனாவை அச்சத்துடன் அணுகி கொண்டிருக்கும் போது, அதையும் சமூக சிந்தனையுடன் அணுகி ஜோச்சிம் லோ கருத்து தெரிவித்துள்ளது, பரவலாக வரவேற்பையும், வழக்கம் போல் சிலரிடமிருந்து எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Corona ,Germany ,Football Coach Action ,earth ,Football Coach , Germany, Football Coach, Corona
× RELATED கொரோனாவும் கடந்து போகும்!