×

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு: புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: கொரோனா பாதித்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவும், மக்களுக்கு இலவச பரிசோதனை செய்யவும்,  ‘கொரோனா வைரஸ் குடும்ப பொறுப்பு சட்டம்’ (எச்ஆர் 6201) என்ற புதிய சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வரப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் 363 எம்பி.க்கள் ஆதரவுடனும், செனட் சபையில் 90 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்தியில் குறிப்பில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க குடும்பங்கள், தொழில் துறையினருக்கு பொருளாதார உதவிகள் கிடைப்பதை இந்த புதிய சட்டம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம், அனைத்து அமெரிக்க குடும்பத்தினரும் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பவர்கள், விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனிப்பவர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும். கொரோனா பாதிப்பால் வேலை இழந்தவர்களுக்கும் இந்த சட்டம் உதவும். முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் குறைந்த வருவாய் குடும்பங்களுக்கும் அவசர கால ஊட்டச்சத்து உதவிகள் கிடைக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு ரூ.1 லட்சம்
கொரோனா வைரசை எதிர்த்து போராட, அமெரிக்கர்களின் வங்கி கணக்கில் நேரடியாக 1500 அமெரிக்க டாலரை (ரூ.1 லட்சம்) செலுத்தவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். 33 கோடி அமெரிக்கர்களின் வங்கி கணக்கில் நேரடியாக நிதியுதவி அளிக்க 500 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏப்ரல், மே மாதத்தில் இரு தவணையாக செலுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதை டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இந்த நேரடி நிதியுதவி திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.’’ என்றார்.


Tags : victims ,Corona ,Trump ,United States , Corona, New Law, Trump, Signature
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...