×

உயிர்க்கொல்லி கொரோனா வைரசை எதிர்க்க போர்க்கால அதிபராக தன்னை அறிவித்தார் டிரம்ப்: மருத்துவ உதவிக்கு ராணுவ கப்பல் பயன்பாடு அமெரிக்காவில் கொரிய போர் கால சட்டம்

வாஷிங்டன்: கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனா வைரசை எதிர்க்க தன்னை போர்க்கால அதிபராக டிரம்ப் அறிவித்துக் கொண்டார். நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க அமெரிக்க ராணுவ மருத்துவ கப்பல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 9,417 பேர் பாதிப்படைந்தும், 150 பேர் பலியாகியும் உள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். நாம் மட்டுமின்றி, உலகமே போரில் ஈடுபட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாததாக இருந்தாலும், உலகமே தெரிந்து கொண்ட ஒன்றாகி விட்டது. நிச்சயமாக அந்த எதிரியை வீழ்த்துவோம். அதற்காக எல்லா வளங்களையும் பயன்படுத்துவோம்.

இந்த பிரச்னைக்கு நாம் தீர்வு கண்ட பின்னர், வழக்கமான பணிகளுக்கு நாம் விரைவில் திரும்பலாம். அதுவரை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். உலகத்தில், பாதிப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை நிச்சயம் இடம் பெறச் செய்வேன். இந்த போரில் நாம் வெற்றிபெற காலதாமதம் ஆவது நல்லது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். அதிபர் டிரம்ப் பேட்டியை தொடர்ந்து, கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்காக ராணுவ மருத்துவமனைக் கப்பல்களை அமெரிக்கா பயன்படுத்த உள்ளது. அவர் தன்னை ஒரு ‘போர்க்கால அதிபர்’ என்று ஒப்பிட்டு, கொரிய போர் கால சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளார். அத்தியாவசியமற்ற பயணிகளை தவிர, அமெரிக்காவும் கனடாவும் தங்களது எல்லையை மூடிவிட்டன. நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, கடற்படையின் 1,000 அறைகள் கொண்ட யுஎஸ்என்எஸ் கப்பலை நகரத்தின் துறைமுகத்திற்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார்.

கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் மாநில ஆளுநர்கள், ராணுவ போர் கப்பலை தங்கள் கரைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கடற்படை செய்தித் தொடர்பாளர் சாமுவேல் பாயில் கூறுகையில், ‘‘ராணுவ கப்பல் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சையளிக்காது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பர். வைரசால் பாதிக்கப்பட்ட கடலோர இடங்களில் உள்ள மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவமுடியும்’’ என்றார். கடந்த 1950ல் கொரியப் போரின்போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தையும் டிரம்ப் செயல்படுத்தி உள்ளார். இதன்மூலம், புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடவும், வணிகங்களை கட்டுப்படுத்தவும், உற்பத்தியை விரிவுபடுத்தவும் முடியும். மேலும், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு முகமூடிகள் மற்றும் பிற உபகரணங்களின் உற்பத்தியை விரைவுபடுத்த முடியும் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags : wartime chancellor ,Corona , Corona, wartime chancellor, announced, Trump
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...