×

நிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு இன்று காலை தூக்குதண்டனை: 7 ஆண்டு இழுபறி முடிவுக்கு வந்தது

புதுடெல்லி: நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிர்பயா பலாத்கார கொலை வழக்கில், சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்ததையடுத்து குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. டெல்லியில் மருத்துவ படிப்பு மாணவி நிர்பயா, 2012ம் ஆண்டு டிசம்பர் 16ல் 6 பேர் கும்பலால் கடுமையான சித்ரவதையுடன் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பஸ்சில் இருந்து வெளியில் வீசப்பட்டார். சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் 2 வாரத்திற்கு பின் அவர் இறந்தார். அந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்றது. இதனிடையே, விசாரணை கைதியாக இருந்த நிலையில் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ராம்சிங், திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு விதிக்கப்பட்டு சிறைவாசத்தை முடித்து மத்திய அரசு கண்காணிப்பில் இருந்து வருகிறான்.

இந்நிலையில், முகேஷ் சிங்(29), பவன் குப்தா(25), வினய் சர்மா(26) மற்றும் அக்‌ஷய் குமார் சிங்(31) எனும் மற்ற 4 குற்றவாளிகளுக்கும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அறிவித்தது. கீழமை நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறையீடு வீணாகி, தூக்கு உறுதி செயய்ப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை குற்றவாளிகள் அணுகியதில், அங்கும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தூக்குதண்டனை உறுதியானது.

அதையடுத்து கருணை மனுவுடன் ஜனாதிபதி மாளிகையை நாடிய அவர்களின் மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்த முயற்சிகளுக்கு மத்தியில் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மற்றும் சட்ட ரீதியில் தங்களுக்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தூக்குக்கயிறு கழுத்தை இறுக்காத வகையில் குற்றவாளிகள் 3 முறை தப்பித்தனர்.

இறுதியாக, மார்ச் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு குற்றவாளிகளை ஒரே நேரத்தில் தூக்கிலிடும்படி நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதன் பின்னரும், குற்றவாளிகள் பல்வேறு சட்ட சாதகங்களை பயன்படுத்த முயற்சித்தனர். அதில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.இதனிடையே தூக்கு தண்டனையை நிறைவேற்ற மீரட் சிறையில் இருந்து ஹேங்கர் பவன் ஜல்லாத் திகார் சிறையை 4 நாட்களுக்கு முன் வந்தடைந்தார். அதையடுத்து தூக்கு ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்த அசாதாரண சூழலில், ஜனாதிபதிக்கு செவ்வாய்கிழமை அனுப்பப்பட்ட குற்றவாளி அக்‌ஷய் குமாரின் 2வது கருணை மனு நிலுவையில் உள்ளதால், தங்களை தூக்கிலிடுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என மற்ற 3 குற்றவாளிகளும் பாட்டியால ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்தனர். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்ததை அடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியானது.

தூக்கு உறுதியாகி உள்ளதால், திகார் சிறையில் அதனை நிறைவேற்றும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செய்யப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். தூக்குமேடை, தூக்குக்கயிறு போன்றவற்றை திகார் சிறை எஸ்பி நேற்று ஆய்வு செய்து திருப்தி தெரிவித்து உள்ளார். மாவட்ட கலெக்டர் அல்லது கூடுதல் கலெக்டர், சிறை எஸ்பி, டிஎஸ்பி, சிறையின் பொறுப்பு மற்றும் உள்ளுரை மருத்துவர்கள் ஆகியோர் முன்னிலையில் தூக்குதண்டனை நிறைவேறும். அப்போது 10 காவலர்கள், வார்டன்கள், 2 ஏட்டு அல்லது அதே எண்ணிக்கையில் ஆயுதம் ஏந்திய போலீசார் அங்கு குவிக்கப்படுவார்கள். நாடு மட்டுமன்றி உலகையே உலுக்கிய விவகாரத்தில், தண்டனை தாமதம் ஆனாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுக்குப் பின் ஒரு வழியாக நிறைவேற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய், முகேஷ் மனுக்கள் நிராகரிப்பு
சம்பவ தேதியில் டெல்லியில் இல்லவே இல்லை எனும் முகேஷ் குமாரின் மனுவை செஷன்ஸ் மற்றும் உயர் நீதிமன்றங்கள் நிராகரித்ததை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அங்கும் அவரது மனுவை நீதிபதிகள் பானுமதி, அஷோக் பூஷண், போபண்ணா ஆகியோர் தள்ளுபடி செய்து அறிவித்தனர். மேலும், அக்‌ஷய் குமாரின் 2வது கருணைமனுவை நேற்று நிராகரிப்பு செய்து அறிவித்த போது ஜனாதிபதி ஒருமித்த மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம் என சந்தேகம் கிளப்பி தொடரப்பட்ட வழக்கையும், ஏற்க முடியாத கருத்து என நீதிபதிகள் மூவரும் தள்ளுபடி செய்தனர்.

தள்ளுபடியான கோரிக்கை
ஜனாதிபதியிடம் அக்‌ஷய் குமாரின் 2வது கருணைமனு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடும்படி மற்ற 3 குற்றவாளிகளும் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அது தொடர்பாக வாதாடிய அரசு தரப்பு வக்கீல், ‘‘அக்‌ஷய் குமார் மற்றும் பவன் ஆகியோர் முதல் முறையாக சமர்ப்பித்த கருணை மனுக்களை நிராகரித்த அதே அடிப்படையில் 2வது கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. மனு நிலுவையில் இருப்பதாக குற்றவாளி தரப்பு வக்கீல் கூறுவது தவறான தகவல்’’, என்றார். அதையடுத்து குற்றவாளிகளின் மனு தள்ளுபடி செய்யபப்டுவதாக நீதிபதி தர்மேந்தர ராணா கூறினார்.

ஆத்மா சாந்தியடையும் நிர்பயா பெற்றோர் நிம்மதி
சட்ட ரீதியில் எப்படி எல்லாம் முயற்சிக்க முடியுமோ அப்படிப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் குற்றவாளிகள் முற்றிலும் இழந்ததை அடுத்து, உரிய நீதி கிடைத்துள்ளதால் 7 ஆண்டுக்குப் பின் மகள் ஆத்மா சாந்தியடையும். இப்போது தான் நாங்களும் நிம்மதி அடைந்துள்ளோம் என கண்ணீர் ததும்ப நிர்பயா பெற்றோர் தெரிவித்தனர்.

Tags : rape convicts ,death ,Nirbaya , Nirbaya, guilty, this morning, executed
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...