×

திருவட்டார் ஒன்றிய தலைவர் பதவிக்காக பாஜ பிரமுகரிடம் ரூ.4 லட்சத்தை இழந்த அதிமுக பிரமுகர்: வைரலாகும் வாட்ஸ்அப் உரையாடல்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில்  தி.மு.க. 5 இடங்களையும், காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 என்று திமுக  கூட்டணி 8 இடங்களையும், அதிமுக 3, பாஜ 1 என்று அதிமுக கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றியது. சில குழப்பங்கள் ஏற்பட்டதால் சேர்மன் பதவிக்கு குதிரை பேரம் நடந்தது. திமுக சார்பில் சேர்மன் பதவிக்கு முன்னாள் சேர்மன்  பிரேமசுதா, ஜெகநாதன் ஆகியோரும், அதிமுக சார்பில் பீனாகுமாரியும் போட்டியிட்டனர். இதில் திமுகவை சேர்ந்த ஜெகநாதன் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்தது. இந்தநிலையில் பாஜ கவுன்சிலரின் ஓட்டுக்காக கொடுத்த ரூ.4 லட்சத்தை எப்படியாவது திரும்ப பெற்று தாருங்கள் என்று பாஜ  முக்கிய புள்ளி ஒருவரிடம் அதிமுக பிரமுகர் செல்போனில் கெஞ்சியது, வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் உரையாடல் விவரம் வருமாறு:
அதிமுக பிரமுகர்: நாம கூட்டணி பேச்சுவார்த்தை பேசினப்ப சேர்மன் ஏடிஎம்கேக்கும், வைஸ் சேர்மன் பிஜேபிக்கும் என முடிவு செய்தோம். ஏடிஎம்கேயில எங்களுக்கு மூணு, பிஜேபிக்கு ஒண்ணு என நாலு, காங்கிரசுக்கு ஒண்ணு என அஞ்சு. இதுல ஏடிஎம்கேயில எனது வீட்டுக்காரிய விட்டுவிட்டு ரெண்டு பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பிஜேபிக்கு நாலு லட்சம் கொடுத்தேன்.
பாஜ பிரமுகர்: இது யாரு பேசியது.
அதிமுக பிரமுகர்: மாவட்ட செயலாளரும் ஒன்றிய செயலாளரும் சேர்ந்து பா.ஜ ஒன்றிய தலைவர் கிட்ட(பெயர் சொல்லப்படுகிறது)
பாஜ பிரமுகர்: ஒன்றிய தலைவர் பேசும்போது பிஜேபியில வேறு யாரு இருந்தாங்க.
அதிமுக பிரமுகர்: பிஜேபியில இருந்து யாரும் இல்ல. நானும் எனது  வீட்டுக்காரியும் இருந்தோம்.
பாஜ பிரமுகர்: அப்ப நீங்க பா.ஜ ஒன்றிய தலைவருக்கு பைசா கொடுத்தீங்களா. இல்ல கொடுக்கலாம்னு வாக்கு கொடுத்தீங்களா.
அதிமுக பிரமுகர்: கொடுத்தோம் அண்ணே. 4 லட்சம் கொடுத்தேன்.
இவ்வாறு உரையாடல் முடிகிறது. தேர்தல் முடிந்து 2 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த உரையாடல் வாட்ஸ்அப்பில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Viraj WhatsApp ,AIADMK ,Thiruvananthapuram ,BJP , Thiruvattar Union Leader, Baja Premier, Prime Minister, WhatsApp Conversation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி