×

ஓசூர் அருகே பரபரப்பு சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ 4 பேர் கருகினர்; 10 வாகனம் நாசம்: கடை வீதி கொழுந்துவிட்டு எரிந்தது

ஓசூர்: ஓசூர் அருகே, சிலிண்டரில் கேஸ் கசிந்து வேனுடன் தீப்பற்றியதில் கடைவீதி முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் 4 பேர் உடல் கருகியதுடன்,10 வாகனங்கள் நாசமானது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே,நெலமங்கலம் பகுதியில் சமையல் கேஸ் குடோன் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து சுமார் 450 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு, ஒரு டெம்போ வேன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு புறப்பட்டது.காலை 11.30 மணியளவில் ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியில் மேடு, பள்ளமான சாலையில் சென்றபோது டெம்போ குலுங்கியுள்ளது. இதனால்,ஏற்பட்ட அதிர்ச்சியில் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்துள்ளது.சிறிது நேரத்தில் குபுகுபுவென வெளியேறியதால் அதிர்ச்சிக்குள்ளான டிரைவர்,நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். சில நிமிங்களில் வேனுடன் சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது.

மேலும், கேஸ் பரவியதால்,அக்கம்பக்கம் உள்ள கடைகளும் தீப்பிடித்து கடைவீதி முழுவதும் தீ பரவியது. அங்குள்ள ஒர்க்‌ஷாப்,கோழிக்கடையில் உள்ள பொருட்கள் குபீரென எரிந்ததால் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும்,சாலையின் இரு பக்கமும் நிறுத்தி வைத்திருந்த 9 டூவீலர்கள் மற்றும் ஒரு ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. தகவலின்பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஒரு பெண் உட்பட 4 பேர் தீக்காயம் அடைந்தனர். இதில்,உடல் முழுவதும் கருகிய சம்சருத் (32) என்ற வடமாநில தொழிலாளி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரே நேரத்தில் கடைவீதியின் இருபுறமும் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் குறித்து,ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Shop street ,Hosur ,gas cylinder , Hosur, gas leak, fire 4 people, blacksmiths, 10 vehicle wrecks
× RELATED பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்