×

கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 4 ஆக உயர்ந்தது குழந்தைகள், முதியோர் வெளியே வர தடை: மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு

புதுடெல்லி: நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு பஞ்சாப்பில் நேற்று மேலும் ஒருவர் பலியானார். இதன் மூலம், நாட்டில் இந்த வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு நேற்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதியோர், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தடை விதித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், 150 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என 3 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு முதியவர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானார். இதன் மூலம், இந்தியாவில் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நோய் பரவும் வேகமும் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்நோய் அறிகுறியுடன் கண்டுபிடிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, தமிழநாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில், வெளிநாடு சென்று திரும்பியவர்கள், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மூலமாக இந்த வைரஸ் அதிகமாகி பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இதையடுத்து, மத்திய அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பஞ்சாப்பில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முதியவர் ஒருவர் பலியானார். அவருக்கு நீரழிவு நோயும், இதய பிரச்னையும் இருந்துள்ளது. இதை தொடர்ந்து, கொரோனா சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாட்டில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 173 ஆக உயர்ந்துள்ளது. 149 பேருக்கு தீவிர பாதிப்பு உள்ளது. 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சட்டீஸ்கர் மற்றும் சண்டிகரில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 20 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுக்கும் வகையில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே செல்லக் கூடாது. தேவையற்ற பயணங்களையும் முதியவர்கள் தவிர்க்க வேண்டும,’ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், விமான போக்குவரத்து அமைச்சக இணை செயலாளர் ரூபினா அலி கூறுகையில், ‘‘ரோமில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்பதற்காக நாளை ஏர் இந்தியா விமானம் அங்கு அனுப்பப்பட உள்ளது. மார்ச் 22ல் அந்த விமானம் இந்தியர்களை மீட்டு தாயம் திரும்பும்,’’ என்றார். மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் `ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான இந்தியர் ஒருவர் இறந்து விட்டார்’ என நேற்று அறிவித்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் இத்தாலியர்கள், பிலிப்பைன்சை சேர்ந்த 3 பேர், இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர், கனடா, இந்தோனேஷியா, சிங்கப்பூரை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 25 வெளிநாட்டினர் உள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47 பேருக்கும், கேரளா 27 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 19 பேர், அரியானாவில் 14 வெளிநாட்டினர் உள்பட 17 பேர், கர்நாடகாவில் 14, லடாக்கில் 8,  ராஜஸ்தானில் 7, தெலங்கானாவில் 6, ஜம்மு காஷ்மீரில் 4, தமிழகம், பஞ்சாப்பில் தலா 2, ஆந்திரா, ஒடிசா, உத்தரகாண்ட், மேற்குவங்கம், புதுச்சேரி, சண்டிகர், ஆகியவற்றில் தலா  ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு தனது ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர அனைத்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக 168 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. `பல ரயில்களில் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கைகள் காலியாக உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் முழுவதுமாக திருப்பித் தரப்படும்,’  என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் கொரோனா வைரசை மனித குலத்தின் எதிரி என்று வர்ணித்துள்ளது.

உலகம் முழுவதும் 2 லட்சம் பேரை பாதித்துள்ள இந்த கொரோனா வைரசின் தாக்குதலை கட்டுப்படுத்த அடுத்த 4 வாரங்கள் வரை அனைத்து நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் எல்லைகளை மூட தயக்கம் காட்ட வேண்டாம் என  தெரிவித்துள்ளது. இதை குறிப்பிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், `கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் எல்லைகளை மூட வேண்டும்.’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் தவிப்பு: பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள 100 இந்திய பயணிகள், சிங்கப்பூர் சாங்காய் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர். மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்பட சில வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் புதிதாக எவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் 3245 பேரை காவு கொண்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 80,928 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நேற்று எவரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக நேற்று ஒருவர் கூட கொரேனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* உலகளவில் பலி 9,020
உலகளவில் தற்போது கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று காலை வரை 9,020 ஆக உள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 4,134 பேர் இறந்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 3,416 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சர்வதேச விமானங்களுக்கு தடை
பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச வர்த்தக விமானங்கள் இந்தியா வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் நாளை மறுநாள் தொடங்கி 29ம் தேதி வரை இந்தியாவில் தரையிறங்க அனுமதிப்படாது என மத்திய அரசு நேற்று அறிவித்தது. நோயாளிகள், மாணவர்கள், ஊனமுற்றோர் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்படும் விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்டுக்களுக்கு சலுகை வழங்குவது இன்று முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பஞ்சாப்பில் 167 பேர் மாயம்
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 167 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்களின் பட்டியலை பெற்று அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என சோதனை செய்ய மருத்துவ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பட்டியலில் உள்ளவர்களின் முகவரிகளைத் தேடிச் சென்றபோது அவர்களைக் காணவில்லை. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள், தாங்கள் கொடுத்த முகவரியில் இல்லாதது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடக்கிறது. இதுகுறித்து, லூதியானா மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்கா கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து லூதியானாவுக்கு திரும்பியவர்களின் பட்டியலில் காணாமல் போனவர்களில் 17 பேரை கண்டுபிடித்துள்ளோம். இன்னும் 167 பேரை காணவில்லை. தேடும் பணியில் சுகாதார துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்ணில் தவறான முகவரி இருப்பதால் அவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மாறிவிட்டதாகத் தெரிகிறது” என்றார்.

* இலங்கையில் பொது தேர்தல் ஒத்திவைப்பு
இலங்கையில் அடுத்த மாதம் 25ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கும் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்துள்ளதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி, வரும் 25ம் தேதிக்கு பின்னர் நிலைமையை பொருத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ரத்தாகும் ரயில்கள் ரயில்கள்
ரத்து பற்றி ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை சென்ட்ரல் - மதுரைக்கு மார்ச் 23, 25, 30ம் தேதிகளில் இயக்கப்படும் ஏசி துரந்தோ விரைவு ரயில், மதுரை-சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 24, 26, 31ம் தேதிகளில் இயக்கப்படும் ஏசி துரந்தோ ரயில், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரத்துக்கு மார்ச் 20, 24, 27, 31ம் தேதிகளில் இயக்கப்படும் ஏசி விரைவு ரயில்கள், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 22, 25, 29, ஏப்ரல் 1ம் தேதிகளில் இயக்கப்படும் ஏசி விரைவு ரயில், மங்களூரு சென்ட்ரல்-மட்கான் சென்ட்ரலுக்கு மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில், மட்கான்-மங்களூருக்கு மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில்  சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேளாங்கண்ணி-எர்ணாகுளத்துக்கு மார்ச் 22ம் தேதி இயக்கப்படும் ரயில், திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு வரும் 31ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில், திருநெல்வேலி-தூத்துக்குடி, திருநெல்வேலி-திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் தலா 13 சேவைகள் உள்பட, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரயில்களில் உள்ள உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகல் போன்ற பிரச்னை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : attacks , Coronavirus, Attack, Kills 4 Aug, Children, Elderly, Prohibition, Federal Government
× RELATED கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே 37 பேர்...