×

சட்டப்பேரவை துளிகள்

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். தொடர்ந்து, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

மறைந்த முன்னாள் எம்எல்ஏவுக்கு இரங்கல்:
சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திருவாரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வே.தம்புசாமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித் துளிகள் எழுந்து நின்று மறைந்த உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்தினர்.

7 மண்டலங்களில் 21 அம்மா மருந்தகங்கள்:
* சட்டப் பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:  
* 15 கூட்டுறவு  நிறுவனங்களின் கட்டிடங்கள்  5.10 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்படும். 10 மத்தியக்  கூட்டுறவு  வங்கிகளில் 3.26 கோடி மதிப்பீட்டில்  19  புதிய கிளைகள் தொடங்கப்படும்.   
* சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை  நிலையத்தில் இரண்டு  படுக்கைகள் மற்றும் குளியல் அறையுடன்  கூடிய  30 அறைகள்  கொண்ட  மகளிர்  விடுதி  1.83 கோடி மதிப்பீட்டில்  கட்டப்படும்.
* திருவள்ளூர்,  சிவகங்கை,  காஞ்சிபுரம்,  கன்னியாகுமரி, கடலூர்,  புதுக்கோட்டை  மற்றும்   விழுப்புரம்  ஆகிய 7  மண்டலங்களில்  1.88 கோடி  மதிப்பீட்டில்  புதியதாக  21  அம்மா  மருந்தகங்கள்  தொடங்கப்படும்.
* காஞ்சிபுரம்  மாவட்டம்,  நங்கநல்லூர்  தொடக்க  கூட்டுறவு பண்டக சாலையில்  பெட்ரோல்,  டீசல்  வழங்கும்  நிலையம் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு நுகர்வோர்  கூட்டுறவு  இணையத்திற்கு 7.12 கோடி மதிப்பீட்டில்  புதிய  அலுவலகம்   கட்டப்படும்.

4,300 கோடி செலவில் ஸ்மார்ட் மீட்டர்:
* சென்னையில் உள்ள 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு 4,300 கோடி செலவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி படித்த அறிக்கை:
* வருவாயை பெருக்கவும், மின் நுகர்வோர்களுக்கு நிறைவான சேவையை வழங்கவும், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைப்பதற்கும், வினைத்திறன் மிகுமின் அளவிகள் (ஸ்மார்ட் மீட்டர்) பொருத்தும் திட்டம் ஒன்று சென்னை மாநகரத்தில் உள்ள சுமார் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு, 4 ஆயிரத்து 300 கோடி செலவில் முதலில் செயல்படுத்தப்படும். பிற மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
* திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் பாதைகளில், சுமார் 200 கிலோ மீட்டர் நீள பாதை, 300 கோடி செலவில் புதைவிடங்களாக மாற்றப்படும்.

ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் 2,500 கோடியில் அடிப்படை வசதி:
சென்னை, மார்ச் 20: சட்டப்பேரவையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி படித்த அறிக்கை:
* ஊரக பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் பாதைகளை தரம் உயர்த்தும் பொருட்டு, 2020-21ம் நிதி ஆண்டில் 350 கி.மீ. நீளத்திற்கு சிமென்ட் கான்கிரீட் சாலைகளும், 200 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் சாலைகளும், 213 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும் ஊரக பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தவும், நீர்நிலைகளை கடந்திடவும் ஏதுவாக 850 குறு பாலங்களும், 350 சிறு பாலங்களும் என மொத்தம் 1,200 சிறு, குறு பாலங்கள் 170 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், மத்திய, மாநில நிதி குழுவின் நிதி மற்றும் அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து 2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  இந்த நிதியில் இருந்து, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி, இணைப்பு சாலை வசதி, சிமென்ட் / பேவர் பிளாக் சாலை வசதி, தெரு விளக்குகள், வடிகால் வசதி, மயான மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.  
* ஆயிரத்து 44 கி.மீ. நீளமுள்ள 299 ஊரக சாலைகள் 553.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* 1,150 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 246 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* ஊரக பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே 10 ஆயிரம் சிமென்ட் கான்கிரீட் தடுப்பணைகள் 460 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 14 ஆயிரம் கோடி வங்கி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Lawyer ,Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly
× RELATED கன்னியாகுமரி இரையுமன்துறை மீன்...