×

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு தள்ளிவைப்பு: இம்மாத இறுதி வரை பணிகளை நிறுத்த அறிவுறுத்தல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை ஒத்திவைத்து மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான பணிகளை மார்ச் இறுதி வரை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 6ம் தேதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதற்கிடையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான கருத்துகேட்பு கூட்டங்கள் கடந்த 10 வரை நடந்தது. இதில் பெறப்பட்ட கருத்துகளை பரிசீலனை செய்து வார்டு மறுவரையறை  இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் வார்டு மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதில் வாக்காளர் பட்டியல் மற்றும் வார்டு மறுவரையறை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதை தள்ளிவைப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவின்படி இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் ஏப்ரல் முதல் வாரத்திற்கு பின்புதான் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வார்டு மறுவரையறை அரசாணை மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Elections ,Corona , Corona virus, local elections, voter list
× RELATED கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள்...