×

தரிசனத்துக்கு வந்த உபி. பக்தருக்கு கொரோனா அறிகுறி திருப்பதி கோயிலில் பக்தர்கள் வருவதற்கு ஒரு வாரம் தடை: மலைப் பாதைகள் அனைத்தும் மூடல்

* l 6 கால பூஜைகள் மட்டும் நடைபெறும்

திருமலை: திருப்பதிக்கு வந்த உத்தர பிரதேச பக்தருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய நிலையில், பக்தர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்து வருகிறது. திருப்பதி கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்த உத்தரப் பிரதேச மாநிலம், நீர்ஜாப்பூரை சேர்ந்த 110 பக்தர்களில் 65 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்  அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவருக்கு திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், திருப்பதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரத்த மாதிரிகள் முடிவுகள் வருவதற்கு 68 மணி நேரமாகும். அவரும், அவருடன் வந்த 110 பக்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மாதவம் யாத்திரிகர்கள் சமுதாய கூடத்தில் இந்த பக்தர்களுடன் இருந்த பக்தர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படும். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவது தவிர்க்க முடியாமல் உள்ளதால் இன்று (நேற்று) மதியம் முதல் அலிபிரி மலைப்பாதை,  பாத யாத்திரையாக வரக்கூடிய மலைப்பாதை இரண்டும் மூடப்படுகிறது.

திருமலையில் இன்று (நேற்று) தரிசனம் செய்வதற்காக 47 ஆயிரத்து 957 பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 29 ஆயிரத்து 590 பக்தர்கள் தற்போது வரை தரிசனம் செய்துள்ளனர். மீதமுள்ள பக்தர்களும் தரிசனம் செய்து முடித்ததும்,  அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படும். நாளை (இன்று) மதியம் வரை உள்ள சேவைகள் மட்டும் நடைபெறும். மேலும், அன்னதான கூடம், மொட்டை அடிக்கும் கல்யாண கட்டா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது.

ஏழுமலையான் கோயிலை கடந்த 1892ம் ஆண்டு இரண்டு நாட்கள் மட்டும் அப்போதைய கோயில் நிர்வாகத்தினர் மூடியுள்ளனர். அதன்பிறகு தற்போது முதல் முறையாக கோயில் மூடப்படாமல் வழக்கம்போல் சுவாமிக்கு நடைபெறக் கூடிய அனைத்து பூஜைகளையும் அர்ச்சகர்கள் மேற்கொள்ள உள்ளனர். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது மட்டும் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது. ஆனால், ஏழுமலையானுக்கு தினந்தோறும் நடத்தப்படும் 6 கால பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சானூரிலும் தரிசனம் நிறுத்தம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. ஆனால், இந்த கோயில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Uppi ,pilgrims ,Tirupati ,mountain passes ,Ubi , UP. Devotees, Corona, Tirupati Temple, Mountain Passes
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...