×

திருச்சி, தென் மாவட்டங்களில் பரவுகிறது கொரோனா: 73 பேருக்கு பரிசோதனை

சென்னை: திருச்சி, தென் மாவட்டங்களில் 73 பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சியில் மட்டும் 36 பேர் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி உலகளவில் 8,000 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 3 பேர் இறந்துள்ளனர். 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்கள் அதிகளவில் வெளியிடங்களில் கூட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தியேட்டர், வணிக நிறுவனங்கள், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு சார்ஜாவில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் அடுத்தடுத்து விமானங்கள் வந்தன. சார்ஜாவில் இருந்து 150 பயணிகள், சிங்கப்பூரில் இருந்து 174 பயணிகள் வந்தனர். அனைவரையும் மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் பரிசோதனை செய்தனர். இதில் 27 பேருக்கு அதிக உடல் சூடு, சளி இருந்தது. இந்த 27 பேரில் 9 பேர் பெண்கள். இதையடுத்து 27 பேரும் தனி பஸ்சில் ராம்ஜிநகர் அடுத்த கள்ளிக்குடியில் மார்க்கெட்டுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு 27 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கொரோனா அறிகுறியுடன், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இந்த காலனிக்கு கேரளாவில் இருந்து நரிக்குறவர்கள் 28 பேர் கடந்த 16ம் தேதி ரயில் மூலம் வந்துள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த இவர்கள், வியாபாரத்துக்காக கேரளா சென்றிருந்தனர். இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் தான் அதிகளவில் கொரோனா வைரசின் தாக்கம் உள்ளது.

இதன்காரணமாக கேரளாவில் இருந்து நரிக்குறவர்கள் வந்துள்ள தகவல் அறிந்ததும், திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவவர் சுகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் சென்று அவர்களை பரிசோதனை செய்தனர். 14 நாட்களுக்கு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். 28 பேரில் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேர், கள்ளிக்குடி சிறப்பு மையத்தில் 27 பேர் என மொத்தம் 36 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென் மாவட்டங்கள்
மதுரை, கீழக்கரை, காரைக்குடி மற்றும் மூணாறு பகுதிகளை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய‌ கீழக்கரையை சேர்ந்த 3 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, கொரோனா பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று துபாயிலிருந்து கீழக்கரை திரும்பிய 35 வயதை சேர்ந்த ஒருவர் உடல் நலமின்றி காணப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த 24 வயதான வாலிபர், நேற்று மாலை துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் அவருக்கு, கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு முகக்கவசம் மற்றும் தனி உடை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை திருப்பத்தூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார். சவுதியில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பி உள்ளதாகவும், இருமல், வயிற்று வலி உள்ளதாக கூறி சிகிச்சை அளிக்க கூறியுள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார் என்பதால் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது ரத்தமாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் சிலர் சிகிச்சையில் உள்ளனர். மூணாறில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர், தங்கியிருந்த டீ கவுண்டி சுற்றுலா விடுதியில், 6 ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டது. 6 பேரையும் உடனடியாக மூணாறு அருகில் உள்ள சித்ராபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர்.

Tags : Coronation spread ,Trichy ,districts ,Southern ,Southern Districts , Trichy, South District, Corona
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்